படையினருக்கு எதிரான விசாரணைக்கு அரசாங்கம் தயாரில்லை – சரத்அமுனுகம

50

‘போர்க்குற்றம்’ என்ற சொற்பதத்தை ஏற்று படையினருக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி சரத்அமுனுகம தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த இலங்கைத் தூதுக்குழுவுக்கு தலைமை வகித்த வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன சிறப்பாக செயற்பட்டார்.

வெவ்வேறு கட்சிகளாக இருந்தாலும் அதை மறந்து ‘நாடு’ குறித்து சிந்தித்தே ஜெனிவாவில் குரல் எழுப்பினோம்.

அதேபோல் இம்முறை மாற்றுபொறிமுறையொன்றை கையாள்வதற்கு ஆலோசனை வழங்கியிருந்த ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்பு நீதிமன்ற பொறிமுறை அவசியம் என வலியுறுத்தப்பட்டிருந்தாலும் அதை நாம் ஏற்கவில்லை. தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கான காலவரையறையையும் ஏற்கவில்லை.

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது. எனவே, எங்கு என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் தீர்மானங்களை எமக்கு எடுக்கமுடியாது.

இலங்கை குறித்த தீர்மானத்துக்கு இணைஅனுசரணை வழங்கிய சில நாடுகள், புலம்பெயர் அமைப்புகளின் தாளத்துக்கேற்ப செயற்பட்டன. கனடா சார்பில் புலம்பெயர் தமிழர் ஒருவரே மாநாட்டில் பங்கேற்றிருந்தார்.

அதேபோல் ஐ.நா. மனித உரிமையாளர் ஆணையாளராக நவநீதம் பிள்ளை செயற்பட்ட காலத்திலேயே இலங்கைக்கு எதிராக கண்மூடித்தனமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவர் ஓய்வுபெற்றாலும், அவர் காலத்தில் செயற்பட்ட அதிகாரிகள் இன்னும் இருக்கின்றனர். எனவே, இது குறித்தும் சிந்திக்கவேண்டும்.

‘போர்க்குற்ற’ விசாரணை என்ற கோட்பாட்டை நாம் ஏற்கவில்லை. மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் உள்நாட்டு நீதி பொறிமுறையின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

SHARE