வாக்குப்பதிவின் போது வன்முறை – தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி உயிரிழப்பு!

62

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைப்பெற்று வரும் நிலையில் தெலுங்குதேசம் – ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ளது.

20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அதோடு, ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள தாடிபத்ரி பகுதியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதன்போது திடீரென தெலுங்குதேசம் – ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

அந்த மோதலில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார். வாக்குசாவடி முன்பு வாக்கு சேகரித்தால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மோதலில் கட்சி நிர்வாகி ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

SHARE