கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருமனிதனுக்கு அவசியம் தேவையானவை

1544

கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருமனிதனுக்கு அவசியம் தேவையானவை அவற்றுள் ஒன்று இல்லாவிட்டாலும் மனிதன் முழுமையானவனாக வாழ்ந்துவிடமுடியாது இவை மூன்றிலும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது என்பது வெளிப்படையே என கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தெரிவித்தார்.

இன்று கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையில் வாணி விழா நிகழ்வும், விஜயதசமியான இன்று ஏடு தொடக்கும் நிகழ்வும் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மட்க்களப்பு இராமகிருஸ்ணமிசன் துறவி ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ், சிறப்பு சொற்பொழிவாளராக அகில இலங்கை விஸ்வ பிரம்மாதீன பீடாதிபதி செந்தமிழ் அந்தணர் திருச்சபை முதல்வர். அருட்கவியரசு பண்டித ஆச்சாரிய விஸ்வப் பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை, மாணவர்கள், பெற்றோர்கள், கல்விசாரா ஊழியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கல்லூரி முதல்வர்.

வாணி விழா நிகழ்வானது கல்வி எனும் கடலை மையப்படுத்தி அதற்கான ஆசீர்வாதத்தினை பெறும் விழாவாக பாடசாலைகள், தொழிற்சாலைகள், வேலைத்தளங்கள், கல்வி நிலைய    ங்கள், வியாபாரத்தளங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகின்றது.

அறியாமை எனும் இருளை அகற்றும் கல்விச்செல்வமானது ஒவ்வொரு மாணவச்செல்வங்களுக்கும் இன்றியமையாததொன்றாகும் அன்னத்தை வாகனமாகக்கொண்டு வெள்ளைத்தாமரையில் வெந்நிற ஆடை அணிந்தவளாக கையில் ஏட்டுடன் காட்சி தருகின்றாள் இச்சக்தியானவள் பரிசுத்தம், தூய்மை என்பனவற்றிற்கு தாயாகவும், கலைகளின் இருப்பிடமாகவும், சமாதானத்தின் தாரகையாகவும், ஞானத்தின் ஊற்றாகவும், அறிவின் உறைவிடமாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றார்.

இந்த உலகிலே மாற்றம் என்ற சொல்லைத்தவிர அனைத்துமே மாறிக்கொண்டுதான் செல்கின்றது இந்த அறிவுப்புரட்சியில் நாங்கள் அனைவரும் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம் நாம் பெற்றுக்கொண்ட அறிவை எவ்வாறு பிரயோகப்படுத்துவது என்று தெரியாமல் நிலை தடுமாறி சின்னாப்பின்னமாக சிதறுண்டு தவித்துக்கொண்டிருக்கின்றோம் ஒரு மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு அடிப்படையானது கல்வியே.

கல்விச்செல்வத்தினை பெற்றுக்கொள்ள நாங்கள் தொடர்ந்து அயராத முயற்சி எடுக்க வேண்டும் அதனை விடுத்து ஒரு நாள் மாத்திரம் முயற்சி எடுத்து விட்டு வேண்டா வெறுப்பாக இருந்துவிடக்கூடாது தொடரந்து கல்வியினை கசடறகற்க முயற்சி எடுக்க வேண்டும்.

எமது வாழ்க்கையில் பல சாதனைகளை புரிய வேண்டும் என்ற அவா ஒவ்வொருவரிடத்திலும் வரவேண்டும் ஏனனில் கல்விச்செல்வமானது அழிவில்லாதது ஏனைய செல்வங்கள் அழிவுறக்கூடியது ஆகவே அழிவில்லாத செல்வத்தினை பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.

கல்வி என்பது ஏழைகளுக்கு சமம் என்றும், செல்வந்தர்களுக்கு அணிகலன் என்றும், வீட்டிற்கு விளக்கு என்றும், நாட்டிற்கு பாதுகாப்பென்றும் கூறுவார்கள் எவ்வளவிற்கு ஒருவர் கோடீஸ்வரராக இருந்தாலும் கல்வியை ஏனைய சொத்து போன்று பெற்றோர்களிடமிருந்து பெற்றுவிடமுடியாது மாறாக அதனை கற்றுத்தான் பெற முடியும்.

கல்வி ஒன்றுதான் வீட்டையும், நாட்டையும், மனிதனையும் உயர்த்தக்கூடியது, பிறப்பில் இருந்து இறப்பு வரை உதவக்கூடியது இந்த உண்மைகளை அறிந்ததன் காரணமாகத்தான் படிக்காமல் இருப்பதனை விட பிறக்காமல் இருப்பது மேல் என்கிறார் பேரறிஞர் பிளேட்டோ அதேபோன்று உலகத்தை மாற்றக்கூடிய ஆயுதம் ஒன்றுன்டு அந்த ஆயுதந்தான் கல்வி என்கிறார் நெல்சன் மண்டேலா, பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும் நாம் கற்ற கல்வி கைவிடாது என்கிறார் மகாத்மா காந்தி இவ்வாறு கல்வியின் பெருமைகள் பற்றி பல அறிஞர்கள் பல கருத்துக்களை கூறியிருக்கின்றார்கள் என கூறினார்.