முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

97

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டளையிடும் தளபதியொருவர் பயன்படுத்தியதாக கருதப்படும் பதுங்குக் குழியொன்று முல்லைத்தீவு காட்டுப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சார்ல்ஸ் அன்ரனி படையணியின் முக்கிய தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக கூறப்படும் பதுங்கு குழியொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் போது குறித்த பதுங்குக் குழியினை புலிகளின் தளபதியொருவர் பயன்படுத்தியதற்கான தடயங்கள் காணப்படுவதாக இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் குறித்த பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசத்தினுள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புப் பிரதான பாதையிலிருந்து தெற்குப் பிரதேசத்திலுள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள குறித்த பதுங்குக்குழி அப்பிரதேசத்தைச் சேர்ந்த விறகு வெட்டச் சென்ற சிலரினால் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் முள்ளியவளை மற்றும் புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளிடம் எமது பிராந்திய செய்தியாளர் தொடர்புகொண்டபோது, இவ்விடயம் தொடர்பில் தங்களுக்கு இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லையெனவும் கூறியுள்ளனர்.