முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக, 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தற்கு மாறாக – பாரிய ஆள் இழப்புக்களுக்கு பின்னரும் – தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான சிங்கள தேசத்தின் படைவீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தனர். அதேவேளை விடுதலைப்புலிகளுக்கான படைக்கல வளங்கள் தமிழீழ கடற்பரப்பினூடாக தாயகத்திற்கு கொண்டுசெல்லப்படுவதை தடுப்பதற்கான முழுமையான ”கடற்தடுப்புச் சுவரை” வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள தேசம் அமைத்திருந்தது. அத்தோடு பாரிய படைக்கல பிரயோகத்துடனும் வல்லாதிக்க அரசுகளின் புலனாய்வு தகவல்களையும் உள்வாங்கியவாறு சிங்கள தேசத்தின் இராணுவ பூதம் தமிழீழ தாயகத்தை முழுமையாக அழிக்கும் வகையில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. வரையறுக்கப்பட்ட போர்த் தளபாடங்களுடனும் ஆட்பல வளத்துடனும் போரிட்ட தமிழர் சேனை வன்னிப்பெருநிலத்தின் பெரும்பகுதியை கைவிட்டு பின்வாங்கியிருந்தது. எனினும் இறுதிவரை ஏதோ ஒரு இடத்திலிருந்து மீண்டும் – ஆக்கிரமித்து வரும் படைகளை தடுத்து – முறியடிப்பு தாக்குதலை செய்து தமிழீழ தாயகத்தை மீட்டுவிடலாம் என்றே அனைத்து மக்களும் நம்பியிருந்தனர். புதுக்குடியிருப்பு பிரதேசம் சிறிலங்கா படைகளிடம் வீழ்ந்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அசாத்திய பலத்தை முழுமையாக நம்பிய மக்களும் விடுதலைப் புலிகளும் தங்களுக்கு ஒரு சிறிய இடைவெளி கிடைத்தாலும் அதனை சாதகமாக பயன்படுத்தி வெற்றியை பெற்றுவிடமுடியும் என்றே முழுமையாக நம்பியிருந்தனர். அந்தவகையில் தான் ஆனந்தபுரம் பகுதியில் – இறுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்திற்கு வெளிப்புறமாக – விடுதலைப்புலிகளின் இறுதிப்போருக்கான அவசர போரரங்கு ஒழுங்குபடுத்தப்பட்டது. தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் அடங்கலாக தளம் அமைத்து பெருமளவிலான முறியடிப்பு தாக்குதல் ஒன்றை திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். விடுதலைப்புலிகளின் பிரதான போர்க்கலங்கள் அனைத்தையும் உள்வாங்கி திட்டமிடப்பட்ட இத்தாக்குதலுக்காக பெருமளவு விடுதலைப் புலிகளும் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர். தொலைதூர தாக்குதலுக்கேயென வடிவமைக்கப்பட்ட போர்க்கலங்கள் அனைத்தும் குறுந்தூர தாக்குதலுக்காக நிலைப்படுத்தப்பட்டு இருந்தது. விடுதலைப்புலிகளின் இத்திட்டமிடலை ஏதோ ஒரு வகையில் அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் எத்தனை இழப்பை சந்தித்தேனும் தடை செய்யப்பட்ட போர் ஆயுதங்களை பயன்படுத்தி என்றாலும், அத்தாக்குதலை முறியடிக்க முடிவெடுத்திருந்தார்கள். அதன்படி ஆனந்தபுரம் பகுதியை சுற்றிவளைத்து அப்பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி முற்றுகை பாணியிலான தாக்குதலை சிறிலங்கா படைகள் முன்னெடுத்தன. தமிழீழ தேசிய தலைவரை பாதுகாப்பாக பின்னகர்த்திய விடுதலைப் புலிகள், சிறிலங்கா படைகளின் முற்றுகையை முறியடிப்பதற்காக உறுதியுடன் போர் செய்துகொண்டிருந்தார்கள். இத்தளத்தில் நிலைகொண்டு இறுதிவரை உறுதியோடு போரிட்டு பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் ஆதவன் / கடாபி, பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா உட்பட விடுதலைப் புலிகளின் பல முக்கிய தளபதிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் மாவீரர்களாக ஆனந்தபுரம் மண்ணில் வீழ்ந்து தமிழீழ தாயகத்தின் விடிவெள்ளிகளாக போனார்கள். விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியான பிரிகேடியர் தீபன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு ஒப்புயர்வற்ற தளபதி. ஜெயசிக்குறு போர்க்களத்தில் சிறிலங்கா படைகளுக்கு சிம்மசொப்பனமாக அறியப்பட்ட தளபதி பிரிகேடியர் தீபன். வவுனியாவிலிருந்து முன்னேறி, கிளிநொச்சியிலுள்ள படைகளுடன் இணைப்பை செய்து, வன்னி பெருநிலத்தை கூறுபோடும் திட்டத்துடன், முன்னேறிய சிறிலங்கா இராணுவத்தை, புளியங்குளத்தில் – 1997 ஆம் ஆண்டில் – தடுத்துநிறுத்தி புளியங்குளத்தை புலிகளின் புரட்சிக்குளமாக்கிய தளபதிதான் பிரிகேடியர் தீபன். புளியங்குளத்தை சுற்றிவளைத்து அதற்கான வழங்கல் பாதைகளை துண்டித்தபோதும், தளராமல் நாங்கள் ”இங்கேயே சமைத்து சாப்பிடுவோம். ஆனால் ஒரு போதும் பின்வாங்ககூடாது.” என உறுதியோடு கூறி அங்கேயே நிலைகொண்டிருந்து முன்னேறிவந்த டாங்கிகளையும் தகர்த்து ஒரு துருப்புக்காவி கவசவாகனத்தையும் கையகப்படுத்தினார். அதற்கு பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையிலும் போர்த்தளபதி பிரிகேடியர் தீபனின் தந்திரோபாயமான படைநகர்த்தல் மிகப்பிரசித்தமானது. சிறிலங்கா படைகள் இன்றுவரை அமைத்த முன்னரங்க பாதுகாப்பு நிலைக் கட்டமைப்புக்குள், மிகவும் பாதுகாப்பானதும் அதற்குள் ஊடுருவி தாக்குதலை செய்வது என்பது சாத்தியமற்றது என்ற நிலையிலான பலமான பாதுகாப்பு அரணாக அன்றைய கிளிநொச்சி சிறிலங்கா இராணுவ தளம் இருந்தது. அப்படியான இறுக்கமான தளத்தை கைப்பற்றும் சமரை வழிநடத்தியவர் தளபதி தீபன் அண்ணை. அதற்கு பின்னர் ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையின்போது பரந்தன் படைத்தளத்தை கைப்பற்றும் நடவடிக்கையின்போது பட்டப்பகலில் மரபுவழி இராணுவமாக தமிழர் சேனையை வழிநடத்தி பல மூத்ததளபதிகளின் பாராட்டை பெற்றவர். ஆனந்தபுரம் தளத்தை தக்கவைக்கவேண்டும் அல்லது அங்கேயே வீரமரணம் அடையவேண்டிவரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு இறுதிவரை உறுதியுடன் போரிட்ட தளபதியின் இறுதி மூச்சும் ஆனந்தபுரம் மண்ணில் அமைதியாய் போனது. பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி அவர்கள் விடுதலைப் புலிகளின் இன்னொரு முக்கிய தளபதி. சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக தமிழீழ தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கரும்புலி தாக்குதல்களை திட்டமிட்டு நெறிப்படுத்திய சிறப்புநடவடிக்கைக்கான தளபதி. தமிழீழ தேசிய தலைவரின் பாதுகாப்பு பணிகளுக்காக தனது போராட்ட வாழ்க்கையின் பெரும்பகுதியை செலவழித்த இத்தளபதி, படைக்கட்டுமானங்களான தொடக்கப்பயிற்சி கல்லூரிகளையும் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகளையும் நிர்வகித்து வந்திருந்தார். தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில், குறைந்தளவு ஆளணி வளங்களுடன் சமரை வெல்வதற்காக, தமிழீழ தாயகத்திலிருந்த எதிரிகளின் தளத்திற்குள், ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்படும் கரும்புலித்தாக்குதல்கள் பெரும்பாலும் இவரது நெறிப்படுத்தலிலேயே நடந்திருக்கிறது. நவீன மரபு வழிக்கட்டமைப்புகளுக்கு அமைவாக சிறப்பு இராணுவ நடவடிக்கைகளை நெறிப்படுத்திய இத்தளபதி புதிய போராளிகளை உருவாக்கும் பயிற்சிக் கல்லூரிகளையும் நேரடியாக கண்காணித்துவந்தார். வன்னியில் போர் இறுக்கமான கட்டத்தை அடைந்தபோது களமுனையிலிருந்தே நேரடியாக படை நகர்த்தலை மேற்கொண்ட இத்தளபதியும் ஆனந்தபுரம் சமரில் விழுப்புண் அடைந்தார். பின்னர் களமுனையிலிருந்து இவரை அகற்றுவதற்கு போராளிகள் பலத்த முயற்சிகள் மேற்கொண்டபோதும் அதுமுடியாமல்போக தமிழீழ தாயகத்தை விடுவிக்கும் போரில் தன்னுயிரையும் அர்ப்பணித்துக்கொண்டார். விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது. “ஐஞ்சிஞ்சி” என செல்லமாக அழைக்கப்பட்ட 120 மிமீ பீரங்கிகள் தான் ஓயாத அலைகள் – I நடவடிக்கையின் போது பாரிய படைக்கல சக்தியாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தது. முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட 122 மிமீ ஆட்லறிகளுடன் ஆரம்பமான விடுதலைப்புலிகளின் கேணல் கிட்டு ஆட்லறி படையணி வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட இன்னும் பல ஆட்லறிகளுடன் பெருவளர்ச்சி கண்டிருந்தது. இரண்டு ஆட்லறிகளுடன் ஆரம்பித்த ஆட்லறிபடையணி பல பத்து ஆட்லறிகளை கொண்டதாக வளர்ச்சியடைந்தபோதும், அதனை சரியான முறையில் பயன்படுத்தி தமிழீழ போராட்டத்தை முழுமையான மரபு வழி இராணுவமாக்கி முழுமைப்படுத்திய பெருமை இத்தளபதிக்கு சேரும். மரபுவழியான முறையில் ஆட்லறிகளை பயன்படுத்தினாலும் நேரடிச் சூடுகளை வழங்கி எதிரிகள் மீது திகைப்புத்தாக்குதலை நடத்தி தரைவழியாக முன்னேறும் புலிகளுக்கு காப்பரணாக ஆட்லறிகளை பயன்படுத்தியமை இப்படையணியின் சிறப்பாகும். ஆனந்தபுரத்தில் நடைபெற்ற அந்தச்சமரின்போது ஆட்லறிப்படையணியை உருவாக்கி வளர்த்தெடுத்த பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார். தமிழீழ பெண்களின் போர்முகத்தை உலகத்திற்கு காட்டிய விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகளின் மூத்த தளபதிகளான 2ஆம் லெப்ரினன்ற் மாலதி படையணியின் சிறப்புதளபதியுமான பிரிகேடியர் விதுசா அவர்களும், மேஜர் சோதியா சிறப்பு படையணியின் சிறப்புத்தளபதியான துர்க்கா அவர்களும் விடுதலைப்புலிகளின் பெரும்பாலான அனைத்து போரங்குகளிலும் தமது படையணிகளை நேரடியாக வழிநடத்தியிருந்தார்கள். ஆனையை அடக்கிய அரியாத்தை என வரலாறு தேடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் அரியாத்தைகளையே உருவாக்கி காட்டிய பெருமை இவ்விரு தளபதிகளையுமே முக்கியமாக சேரும். ஆண் போராளிகளுக்கு நிகராக பெண் போராளிகளையும் போர்க்களத்தில் நகர்த்திய இப்போர்த்தளபதிகள், தமிழீழ தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து, உலகப் பெண்களுக்கு முன்னுதாரணமாக தமிழீழ பெண்களை உருவாக்கினார்கள். ஆனந்தபுரம் சமரின்போது இவர்களும் ஆனந்தபுரத்தின் விடிவெள்ளிகளாக தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து வீரகாவியம் படைத்தார்கள். ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் பலரையும் களமுனைத்தளபதிகள் பலரையும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் இழந்த அந்தச்சமர் தமிழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.
தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும்.
இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.
1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும்.
இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.
இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.
பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.
1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.
தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.
இந்த இரண்டு ரி 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.
1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.
1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.
1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல் மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.
ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.
இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.
இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.
1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.
1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.
ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.
இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.
2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.
அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.
கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக்குண்டுத்தாக்குதலில் வீரகாவியமானார்.
25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.
சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்கப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.”
தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்;
“ஆனந்தபுர விடிவெள்ளிகள்”
“மேயர் சோதியாப்படையணித் சிறப்புத்தளபதி”
அன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா! தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பணிவாகக் கட்டளைக் கடிதம் எழுதியது கூட எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா என்றும் சிலர் அக்காவின் வீரச்சாவின் பின்னர் கூறினர். வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் மணிவண்ணன், மகளிர் பொறுப்பாளரும் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியுமான பிரிகேடியர் விதுசா ஆகியோருடன் பிரிகேடியர் துர்க்காவும் வீரச்சாவு என்ற செய்தி அங்கு இருந்த எங்களின் இதயங்களைக் கிழித்தது. மனம் அதை நம்ப மறுத்தது. அனைத்துப் பெண் போராளிகளும் கண்ணீர்விட்டு ஓலமிட்டு அழுதனர். பெண் போராளிகளுக்கு இனி ஒரு தலைமை கிடைக்குமா என அனைத்து உள்ளங்களும் ஏங்கியது.
1971ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி கலைச்செல்வி பொன்னுத்துரை என்னும் பெயர் சூட்டி நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த பெண் பிள்ளை தான் எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா. யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் விடுதலைப் புலிகளின் நான்காவது மகளிர் பயிற்சிப் பாசறையில் 1989ம் ஆண்டு தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். தலைவனின் நிழலில் மணலாற்றுக் காட்டில் தலைவரே நேரடியாக பயிற்சியை வழிநடத்திய காலத்தில் வளர்ந்தவர்தான் இவர். கடற்புலி லெப்.கேணல் மாதவி, கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி, கப்டன் வானதி, மேஜர் கஸ்தூரி, கப்டன் பாரதி போன்ற ஒப்பற்ற பெண் போராளிகளும் இதே பாசறையில்தான் தங்களின் பயிற்சியை ஆரம்பித்திருந்தனர். இவரது போராட்டப் பற்றையும், துணிவான கள ஆற்றலையும் கண்ட தேசியத் தலைவர் 1991ம் ஆண்டு மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட வைத்தார். இவர் அடிக்கடி மகளிர் பிரிவின் முதல் படைத் தளபதியாக இருந்த மேஜர் சோதியா அக்கா அவர்களை நினைவு கூறுவதோடு அவரில் மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவர் காட்டிய அன்பும், இறுக்கமான பண்புமே தங்களை தலைவனை அறிந்து கொள்ளவும் போராட்டத்தின்பால் பற்று மிக்கவராக மாற்றவும் உந்து கோலாக இருந்தது என்றும் அவர் அடிக்கடி கூறுவார்.
உருவத்தில் மிகவும் சிறிய தோற்றம் கொண்டவராக இவர் இருந்தாலும் சிறப்புத் தளபதியாகத் தனது ஆயுத உறையில் கைச்சுடுகலனைக் கட்டிக் கொண்டு வலம் வரும்போது மிகவும் கம்பீரமாகவே இருக்கும். 1996 க்கு முன்னர் பல சிறிய களமுனைகளைச் சந்தித்து இருந்தாலும் 1996ம் ஆண்டு ஜுன் மாதம் மேஜர் சோதியா படையணியின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டு 450 வரையிலான போராளிகளுடன் மூன்று கம்பனிகளுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓயாத அலைகள் 1, 2, 3 ஆகிய நடவடிக்கைகளுடன் ஜெயசுக்குறு எதிர்ச்சமர் மற்றும் தீச்சுவாலை நடவடிக்கை ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டு அணிகளை வழிநடத்தி வந்தார் பிரிகேடியர் துர்க்கா. தீச்சுவாலை நடவடிக்கையின் போது வயிற்றில் விழுப்புண் அடைந்த நிலையில் களத்தில் எதிரியின் முற்றுகையில் நின்றபடி ‘எங்களைப் பாக்காதீங்க..எங்கட இடத்துக்கு செல்லை அடியுங்க’ என்று மிகவும் துணிச்சலாக அவர் கூறிய பாங்கை பல வருடங்களுக்குப் பின்னரும் இயக்கத்தில் பலரும் பெருமையாகக் கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கும்.
எப்பொழுதும் சிரித்த முகம். எந்த ஒரு தரத்தில் உள்ள போராளியையும் எழுந்து நின்று வரவேற்று அமர வைக்கும் பணிவான குணம். அந்த முகத்தை நாங்கள் இனிக் காண மாட்டோம் என்பது இன்னமும் எங்களால் நம்ப இயலாத ஒன்று. வீரர்கள் நிச்சயமாக வீழ்வதில்லை. அவரின் உணர்வும் உருவமும் அப்படித்தான் இன்னமும் எங்களை ஆக்கிரமிக்கின்றது. காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் யோகா செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. பயங்கரவாதி என்று எங்களை வர்ணிக்கும் பாதகர்கள் துர்க்கா அக்காவுடன் ஒருநாள் அமர்ந்து கதைத்திருக்க வேண்டும் என நாங்கள் எண்ணிய நாட்கள் பல உண்டு. 2006ம் அண்டு சமரில் கம்பனியை வழிநடத்திச் சென்ற லெப். கேணல் ஆர்த்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார். ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு சிறந்த புகைப்படவியலாளர், அமைப்புக்குத் தேவையான ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்க்கும் ஒருவர், கராத்தே மற்றும் யோகாக் கலையை விரும்பிப் பயின்ற ஒரு அன்பான உள்ளம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக பெண்புலிகளின் ஒரு படையணியை வழிநடத்திச் சென்ற ஒரு சிறந்த தலைவி. உலகில் எந்த மூலையிலும் எந்தப் பெண்களாலும் செய்ய இயலாத ஒரு செயல் அது. உலகப் போர்களின் போதும் ஏனைய உள்நாட்டு யுத்தங்களின் போதும் முயன்று முயன்று தோற்றுப் போன ஒரு எண்ணக்கரு. முழுவதுமாக, எந்த வித ஆண்களின் தலையீடும் இன்றி, பயிற்சி தொடக்கம், நிர்வாகம், தொழில்நுட்பம், மற்றும் களமுனை வரை பெண்களை மட்டுமே வழிநடத்திச் செய்து முடித்த, செய்து வெற்றி கண்ட பெருமை எங்கள் பிரிகேடியர்களான விதுசா அக்கா மற்றும் துர்க்கா அக்கா ஆகியோரை மட்டுமே சாரும். எந்த ஒரு விடயத்தையும் அக்காவிட்டைக் கேட்டுச் செய்ய வேணும் என்று சொல்லிவிட்டு விதுசா அக்காவின் கருத்தை நாடி கலந்து ஆலோசித்து செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. வீரச்சாவிலும் இருவரும் பிரியாமல் சென்றது ஈழப் பெண்களுக்குரிய தலைமைக்கு ஒரு பாரிய இழப்பென்றே சொல்ல வேண்டும்.
தனக்கென தலைவன் கொடுத்த படையணியை அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்தவர்களாக, அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை நோக்கியே பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களின் செயற்பாடுகள் இருக்கும். போர்களில் பெண்கள் என்னென்ன வழிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு பல ஆங்கில பொத்தகங்கள் மற்றும் ஒளிநாடாக்களை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பார். 2001ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் துர்க்கா அக்காவுக்கு கேணல் தரத்தை வழங்கியிருந்தார். விழுப்புண் அடைந்த நிலையிலும் அவரது வேலைகள் அனைத்தையும் அவரே செய்ய வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தமாக இருப்பார். அவருடன் நிற்கும் போராளிகள், அக்கா பாவம் என்று சொல்லிவிட்டு அவருக்கு கிணற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு உதவினால் கூட ‘ஏன் எனக்கு எடுக்க இயலாதா… நீங்கள் போய் உங்கட கடமைகளைச் செய்யுங்கள்’ என அன்பாகக் கடிந்து கொள்வார். விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் கீழ் இயங்கி வந்த போர்ப்பயிற்சி, தொலைத்தொடர்புப் பிரிவு, கணினிப் பிரிவு, படையப் புலனாய்வுப் பிரிவு, அரசியல்துறை, புலனாய்வுத்துறை, படையத்தொடக்கப் பயிற்சிக் கல்லூரி, படையறிவியல் கல்லூரி, புகைப்படப் பிரிவு, திரைப்படப் பிரிவு, காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றினதும் மகளிர் பொறுப்பாளர்களுக்கான மகளிர் பேரவைக் கூட்டம் மாதம் ஒருமுறை நடைபெறும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று பெண் புலிகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படும். இதற்கு பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா ஆகியோரே தலைமை வகித்தனர். பெண்கள் தொடர்பில் எந்த ஒரு முடிவையும் தாமாகவே எடுக்கும் அதிகாரத்தை தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுக்கு வழங்கியிருந்தார்.
காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்கள் ஒரு மணி நேரம் யோகா செய்ததன் பின்னர் மேஜர் சோதியா அவர்களின் படத்துக்கு மெழுகுதிரி கொழுத்தி கைகூப்பி வணங்குவார். அதன்பின்னர் தனது கடமைக்குத் தயாராகி விடுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளமாகச் சென்று போராளிகளுடன் அவர்களின் இன்ப துன்பங்களைக் கதைத்து அறிந்து கொள்வார். 2008ம் ஆண்டு மே மாதம் சோதிய படையணிப் போராளிகள் ஓமந்தைப் பகுதியில் லெப்.கேணல் வரதா தலைமையிலும் மன்னாரில் லெப்.கேணல் செல்வி தலைமையிலும், மணலாற்றில் லெப்.கேணல் தர்மா தலைமையிலும் முகமாலையில் மணிமொழி தலைமையிலும் களத்தில் நின்றிருந்தனர். பிரிகேடியர் துர்க்கா அவர்கள் ஒவ்வொரு களமுனையாக மாறி மாறிச் சென்று அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து களமுனைக்கு அவர்களைத் தயார் படுத்தி விட்டு வருவார்.
விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள பலரும் அவருக்கு இட்ட பெயர் ‘காட்டுக் கோழி’. காடுகளில் தனி பிரியத்தோடு வாழும் அவர் தனது முக்கியமான முகாமை காட்டின் நடுவே வைத்திருந்தார். 1996ம் ஆண்டு வரை தலைவனின் பாசறையாக இருந்த அந்த முகாமை அதற்குப் பின்னர் சோதியா படையணிப் போராளிகள் நிர்வாகம் செய்து வந்தனர். 50 அடி ஆளமான கிணற்றில் தண்ணீர் அள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் குளித்து. காட்டுப் பயிற்சி பெற்று, காட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய காட்டு நகர்வுகளுக்குச் சென்று களைப்புடன் திரும்புவார்கள். அங்கே ஒரு சிறிய அறையில் தனக்குத் தேவையான அரசியல், விஞ்ஞானப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார் துர்க்கா அக்கா. போராளிகளின் கதைத்து, பயிற்சி அளிக்கும் நேரம் போக மிகுதி இருக்கும் நேரங்களில் அந்தப் புத்தகங்களும் அவரின் உடன் பிறந்த சகோதரன் அவருக்குக் கொடுத்த கணினியும்தான் அவரின் நண்பர்கள். காட்டுக்குள் சென்று அங்குள் மரங்கள், இலைகள், பூக்கள், விலங்குகள், பழங்கள், போராளிகள் அனைத்தையும் படமெடுத்து தனது கணினித் திரையை அலங்கரிப்பார்.
அங்குள்ள காடுகளின் தன்மையை அறிந்து கொள்வதிலும் அதை ஏனைய போராளிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறை கொண்டு செயற்படுவார். சமாதான காலத்தில் இங்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்தக் காடுகள் மிகவும் வேறுபட்ட தன்மை உடையதாகவும் மிகவும் குறுகிய தூரத்திற்கும் இவற்றின் தன்மை வேறுபடுவதாகவும் கூறியிருந்தது இவருக்கும் மிகவும் ஆர்வமான விடயமாக இருந்தது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படியான காடுகளைக் காண்பது அரிது என்றும் தமிழீழத்தில் மூன்றில் இரண்டு பகுதி காடாக இருப்பது நாட்டின் சூழலுக்கு நன்மை தரும் என்றும் அடிக்கடி குறிப்பிடுவார். இரவு நேரங்களில் பெண் பிள்ளைகள் வெளியில் செல்லக் கூடாது என்று வளர்ந்த சமூகங்களில் இருந்து வந்த பெண்புலிகள் காட்டைப் பாதுகாக்க இரவு நேரக் காவற்கடமைகளில் துணிச்சலாக நின்று பல எதிரியின் வேவுக் காரர்களைப் பிடித்து அடைத்தார்கள் என்பது பல சமயங்களில் வெளியில் தெரிய வராமல் போன உண்மை. களமுனையில் நிற்கும் போராளிகளுக்கு சிற்றுண்டிகள் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல முறைகள் தானே வேறு போராளிகளுடன் சேர்ந்து நின்று சிற்றுண்டி வகைகள் செய்து கொண்டு செல்வார்.
களமுனையில் நிற்கும் ஆண்போராளிகள் கூட ‘அக்கா வந்து போனவா..கட்டாயம் ஏதாவது கொண்டு வந்திருப்பா… மறைக்காமல் எடுங்கோ..’ என்று உரிமையோடு கேட்கும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தார் அவர். கராத்தே கலையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அதை பெண் போராளிகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் முனைப்புடனும் இருந்த அவர் மேஜர் சோதியா அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் மேஜர் சோதியா அவர்களின் நினைவு தினத்தன்று பெண்களுக்கான கராத்தே சுற்றுப் போட்டியைத் தனது நண்பரும். கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்று கடற்புலிகளில் தளபதியாக இருந்த கெங்கா அக்காவுடன் இணைந்து நடத்தி வந்தார். கரும்புலிப் பயிற்சி பெற்றிருந்த கெங்கா அக்கா அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி நாட்களில் நடந்த கடற்சமரில் கரும்புலியாகச் சென்று எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
பிரிகேடியர் துர்க்கா அக்காவுக்கு குழந்தைகளில் அதிகப் பிரியம். செஞ்சோலை நிகழ்வுகளுக்குச் சென்று அந்தக் குழந்தைகளுடன் அளவளாவிக் கொள்வதிலும் அவர்களை விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுப்பதிலும் எப்போதுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். திருமணமான பெண் போராளிகளின் குழந்தைகளை விதம் விதமாகப் படங்கள் எடுத்துத் தனது கணினியில் அவர்களை அலங்கரித்துக் கொள்வார்.
வீரச்சாவைத் தழுவிக் கொள்வதற்கு முன்னர் இறுதியாக களமுனைக்கு வெளியில் நின்ற போராளிகளை அவர் சந்தித்தது மார்ச் மாதம் 21ம் திகதி. புதிதாக போராட்டத்தில் இணைந்த போராளிகளுக்கு எதிரியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் எழ வேண்டிய கட்டாயத்தை அன்று அவர் அன்போடு கூறி விளங்க வைத்தார். களமுனையில் எறிகணைகள் மழை போல் பொழியும் நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அடிப்படைப் பயிற்சி முகாமை வந்து சேர்ந்தார். மிகவும் களைப்புடன் இருந்தார். எங்கும் எறிகணைகள் மழை போல் பொழிந்த வண்ணம் இருந்தன. முள்ளிவாய்க்கால் கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பெண்களுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையில் இருந்த பனங்கூடலுக்கு இடையில் ஒரு கொட்டகைக்குள் படுத்திருந்தார். களமுனையில் நித்திரையின்றி அவர் உழைத்தது அவரின் உடலில்தான் தெரிந்தது. உணர்வும் உத்வேகமும் இன்னமும் எந்த மாற்றமும் அடையவில்லை.
‘என்னக்கா? அண்ணா என்ன சொல்கிறார்?’ ஒரு இராணுவ வீரன் என்றவன் கடைசி வரைக்கும் எதிரிக்கு எதிராகப் போராடி வீரச்சாவை அடைய வேணும். அதுதான் அவனுக்கு அழகு அப்படித்தான் அண்ணா நினைக்கிறார். எவனிடமும் பணிந்து போயோ அல்லது கைப் பொம்மைகளாகவோ அண்ணா இருக்க விரும்ப மாட்டார்’ என்று கூறிவிட்டு நாங்கள் அனைவருமே இரண்டு மாதங்களாகக் குடித்துக் கொண்டிருந்த அதே அரிசிக் கஞ்சியைக் குடித்துவிட்டு எறிகணைகள் ஓலமிட்டுக் கொண்டிருக்க சற்று நேரம் பாயை விரித்து சாய்ந்து கொண்டார். களமுனையில் பல மணிநேரங்கள் நித்திரை கொள்ளாமல் எதிரியின் எறிகணைக்குள் மாட்டியிருந்து கண்விழித்து எங்களைக் காத்த அந்த உயிர் உறங்குவதை அன்றுதான் நாங்கள் கடைசியாகக் காணப் போகின்றோம் என்பது எங்களுக்கு நிச்சயம் தெரியாது.
குறிசூட்டுத் திறனில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுத் தளபதிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடிக்கடி தேசியத் தலைவரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொண்டு வந்தார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. தனக்குக் கீழுள்ள போராளிகள் வேவுத் திறன், மறைந்திருந்து தாக்கும் பயிற்சி, வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல், பாதுகாப்புச் சமர் ஆகிய அனைத்திலும் ஆண் போராளிகளுக்கு சமமாக தங்களால் எல்லா விதத்திலும் களமுனையில் காட்ட முடியும் என உறுதியோடு நின்று நிரூபித்துச் சென்று விட்டுள்ளார் பிரிகேடியர் துர்க்கா. தலைவனின் ஆணையை அப்படியே ஏற்று நடத்தி வந்த அவரைப் பற்றி அவரின் வீரச்சாவின் பின்னர் ஒரு தனிப்பட்ட சந்திப்பில் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிடும்போது
‘எனக்கு விசுவாசமான தளபதிகளை நான் இழந்திட்டன்’ என்று குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைவனின் தங்கையாக, பெண்புலிகளின் தளபதியாக, தன்னிகரற்ற ஒரு தலைவியாக விளங்கிய எங்களின் துர்க்கா அக்கா பிரிகேடியர் துர்க்காவாக 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி அதிகாலை வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
அவரின் வழிகாட்டுதலை ஏற்றுநின்று இறுதிச் சமரின் நான்கு மாதங்களில் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய சோதியா படையணிப் போராளிகளான லெப். கேணல் அகநிலா, லெப்.கேணல் மோகனா, லெப்.கேணல் செங்கையாழினி, லெப்.கேணல் அரசலா, லெப்.கேணல் அறிவு, லெப்.கேணல் சோழநிலா, லெப். கேணல் வரதா, லெப்.கேணல் மொழி, மேஜர் அகல்மதி, மேஜர் விதுரா, மேஜர் செஞ்சுரபி, மேஜர் ஈழக்கனி, மேஜர் இசைபாடினி, மேஜர் இசையறிவு, மேஜர் கலைமகள், மேஜர் ஈழநிலா, கப்டன் அலையரசி ஆகியோருக்கும் புதிதாக இணைந்து மிகவும் தீர்க்கமாகத் துணிவுடன் செயற்பட்டு இறுதியாக பிரிகேடியர் துர்க்கா அவர்களினால் 2ம் லெப் தரம் வழங்கப்பட்டு வீரச்சாவடைந்த 2ம் லெப் தர்சினி மற்றும் மே மாதம் 15ம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மூத்த போராளிகளான நயவாணி, கௌசலா மற்றும் இன்னமும் பெயர் குறிப்பிடப்படாத பல நூறு மாவீரர்களதும் கனவும் எங்கள் ஆன்மாவில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாடு விடுதலை அடையும் நாளில் அவர்களின் துயிலறைகளை அழகுபடுத்தி அலங்கரிக்கும் அந்த நாட்களே எங்களுக்கு வரக்கூடிய பொன்னான நாட்கள் .
பிரிகேடியர் விதுசா! பெண்களின் வீரத்தின் விருட்சம்
குருக்கள் கந்தையா, ஞனாம்பிகை இணையருக்கு ஞானபூரணி என்ற இயற்பெயர் பூண்ட விதுசா மூத்த மகளாக 1969 செப்ரம்பர் 29ம் நாள் கரவெட்டி கப்புதூவில் பிறந்தார்.
இவர் தனது பதின்ம வயதில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வர்த்தகப் பிரிவில் படிக்கும் போது புலிகள் இயக்கத் தொடர்பு ஏற்பட்டது.
இக்காலப் பகுதியில் அவர் விடுதலைப் புலிகளின் பகுதி நேரப் பணியாளராக இணைந்தார். 1986 மே மாதத்தில் விடுதலைப் புலி உறுப்பினராக இணைந்தார். அப்போது அவருக்கு வயது 17. அவர் வாழ்ந்த காலம் 40 வருடம். வீரச்சாவடைந்த நாள் 2009 ஏப்ரல் 04ம் நாள்.
2001-2009 காலத்தில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. அவருக்கு இலக்கிய தாகம், உலக நிகழ்வுகளை நகர்த்தும் அடிப்படைகள் பற்றிய ஆர்வம், இராணுவத் தொழில்நுட்பத் தகவல்கள் திரட்டும் வேட்கை என்பன மிகுதியாக இருந்தன.
உயர் கல்வி கற்றுத் தேறவில்லை என்ற ஏக்கமும் இருந்தது. இயக்கத்தில் இணைந்த சிறிது காலம் அவர் சுதந்திரப் பறவைகள் பிரிவில் இருந்தபடி கிராம ரீதியாகக் கருத்தூட்டல் பணிகளில் ஈடுபட்டார். உற்ற தோழிகளான லெப் நித்தியா பவானி, மேஜர் சஞ்சிகா கலை ஆகியோர் இந்தப் பிரிவின் சுகாதரப் பணிகள், எழுச்சிக் கருத்தரங்குகள் ஆகியவற்றை அவருடன் நடத்தினர்.
விடுதலைப்புலிகள் மகளீர் 2ம் அணியில் விதுசா ஆயுதப் பயிற்சி பெற்றார். 1987ல் சிங்கள இராணுவம் நடத்திய ஒப்பரேசன் லிபரேசன் என்ற வடமராட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் அவர் தனது போராட்ட வாழ்வைத் தொடங்கினார். இந்தியப் படைகள் வந்தபோதும் அவற்றிற்கு எதிரான கோப்பாய்ச் சமரில் அவர் முக்கிய பங்கேற்றார். இதன் போது முதலாவது பெண் மாவீரர் மாலதி 10.10.1987ம் நாள் வீரச்சாவடைந்தார். அதன் பிறகு புலிகள் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கலில் வன்னி நிலத்திற்குச் சென்றார்.
எம் தலைவர் அவர்கள் வழிகாட்டலில் பெண் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கும் பணியில் வன்னியில் ஈடுபட்டார். பலவீனமான எமது இனத்தின் பலமான பாதுகாப்பு அரணாக அவர் பெண் போராளிகளை உருவாக்கினார்.
1988ம் ஆண்டுப் பிற்பகுதியில் யாழ் சென்ற மகளீர் அணியுடன் விதுசா சென்றார். யாழ் குடா முழுவதும் இந்திய இராணுவம் செறிவாக நின்ற காலமாயினும் அவரும் தோழிகளும் புதிய பெண் போராளிகளை இணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். பொறுப்புக்களைச் சுமக்கும் தகுதி பெற்ற அவர் 3ம், 4ம் மகளீர் அணிகளை உருவாக்கி அவற்றை வன்னிக்கு வழிநடத்திச் சென்றார். அங்கு களமுக அடிப்படைப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். விடியல் பாசறையின் பொறுப்பாசிரியராக அவர் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.
2ம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பிறகு கொக்காவில் படை முகாம் தாக்குதலில் பங்கேற்ற விதுசா காலில் காயமடைந்தார். தேறியபின் ஆனையிறவு, யாழ் கோட்டை, பலாலி இராணுவ முகாம்களைச் சுற்றிக் காவல் பணி செய்தார். 1990 கார்த்திகையில் நடந்த தச்சன்காடு மினி முகாம் தாக்குதலில் நெடுநாட் தோழி மேஜர் சஞ்சிகா கலை வீரச்சாவடைந்தார்.
இந்தப் இழப்பு அவரைப் பலமாகத் தாக்கியது. அதை எண்ணும் போது என் இதயம் வெடித்துவிடும் போல் இருக்கும் என்று அவர் சொன்னார்.
1991ல் நடந்த ஆனையிறவுச் சமரில் மாதர் அணியின் ஒரு பகுதித் தளபதியாயகப் பதவி உயர்ந்தார். அவருடைய திறமைக்கு தலைவர் அவர்களின் பாராட்டுக்கள் கிடைத்தன. தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் வல்லவர் என்ற சிறப்பைப் பெற்றார்.
தலைவர் அவர்களின் இலட்சியக் கனவான தமிழீழ உருவாக்கத்திற்கு அவர் அல்லும் பகலும் உழைத்தார். அவருக்கு சொந்த வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய சிந்தனை இருந்ததில்லை “அண்ணையின் கனவை நிறைவேற்றுவது” ஒன்று தான் அவருடைய வாழ்க்கைக் குறியாக இருந்தது.
2ம் லெப் மாலதி படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் விதுசா மகளீர் அணியின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்ட விதுசா 1992 கார்த்திகையில் இடம் பெற்ற பலாலி 180 காவலரண் தாக்குதலில் காலிலும் தலையிலும் விழுப்புண் அடைந்தார். அறிவிழந்தாலும் கட்டளைகளைப் பிறப்பித்தபடி இருந்ததாக அவர் பிற்காலத்தில் சொன்னார்.
1993நவம்பர் 10-13ல் நடந்த பூநகரி ஒப்பரேசன் படை நடவடிக்கையில் அவர் பிற்களப் பணியில் ஈடுபட்டார். அதே வருடம் முதலாவது பெண் மாவீரர் மாலதியின் பெயரில் உருவாக்கப்பட்ட மாலதி படையணியின் கட்டளைத் தளபதியாக கேணல் என்ற பதவியோடு நியமிக்கப்பட்டார்.
சந்திரிக்கா அரசின் சமாதனத்திற்கான போர் அடுத்த வருடம் தொடங்கிய போது தலைமைப் பொறுப்பேற்று மாலதி படையணியை வழி நடத்தினார்.
அவருடைய களப் பயணம் 1993 தொடக்கம் வீரச்சாவடையும் 2009 வரை ஒரு போதும் ஓய்ந்ததில்லை. யாழிலும் சரி வன்னியிலும் சரி எண்ணற்ற சமர்களில் பங்காற்றினார். இதயபூமி, இடிமுளக்கம், இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ச்சமரை வழிநடத்தியதோடு புலிப்பாய்ச்சல் ஆகியவற்றில் திறம்படச் செயற்பட்டார்.
யாழ் தீபகற்பத்தை சிங்கள இராணுவம் கைப்பற்றுவதற்கு நடந்த சூரியக்கதிர் சமரில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. புலிகளின் போராட்ட வரலாற்றில் மிக நெடிய காலம் தொடர்ந்த ஜெயசிக்குறு எதிர்ச்சமரிலும் அவர் அரும்பணியாற்றினார். 1998ல் ஓயாத அலை 2 படை நடவடிக்கையில் முக்கிய பங்கேற்ற அவர் கிளிநொச்சி புலிகள் வசம் வீழ்ந்த போது தேசியக் கொடியை களத்தில் அவரே ஏற்றினார். இது அவருடைய போராட்ட வாழ்வின் உச்சமாகக் கருதப்படுகிறது.
1999 செப்ரம்பர் 18ம் நாள் அவர் தனது இளைய சகோதரன் போராளி விதுசன் கேதீஸ்வரனைக் களத்தில் இழந்தார். ஓயாத அலை 3, தீச்சுவாலை முறியடிப்புச் சமர் ஆகிய வற்றில் அவருடைய வழி நடத்தல் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்தன. சிங்கள இராணுவத்திற்கும் எமக்கும் இடையில் 2008 தொடக்கம் 2009 வரை நடந்த சமச்சீரற்ற போரில் தம்பனையில் இருந்து ஆனந்தபுரம் மந்துவில் வரை விதுசா ஓய்வின்றிக் களமாடினார். உணவின்றி உறக்கமின்றி எதிரியை விரட்டி அடிப்பதில் குறியாக இருந்தார்.
ஆனந்தபுர சமர், மாவீரர்களின் வீர வரலாறு
போர்க்களங்களில் புயலாக நின்ற வீரன் பிரிகேடியர் மணிவண்ணன்
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார். கேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்.
கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயற்பாட்டுக் காலப்பகுதியில் தான் சிறிலங்காப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்ககது. பலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை – பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் என்று பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது உண்மையே.
அதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூச்சின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இவரின் காலப்பகுதியிலே தான். விடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.
முன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும், போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த போதிலும் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சூற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்ததன. அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்துடன் நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.
இந்த வகையில் தான் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வல்வளைப்புக்குள் சென்றுகொண்டிருந்தபோது நேரடியாகவே ஆனந்தபுர மண்ணிலே பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி நேரடியான பல தாக்குதல்களை படையினர் மீது ஏற்படுத்தி பல இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர். அந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கட்டளைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் சிங்களப் படையின் தாக்குதலில் ஆனந்தபுர மண்ணிலே பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் இன்னும் சில தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.
சித்திரை மாதம் , 05ம் திகதி மட்டும் நடந்த இந்தச் சமரில் இறுதிவரை எதிரியோடு சமரிட்டு காவியமாகிய 450க்கு மேற்பட்ட மாவீரர்களையும் இந்நாளில் நெஞ்சிருத்தி நினைவு கூறுகிறோம். ஆண்டுகள் பல ஆனாலும் அழியாது உங்கள் நினைவுகள் என்றென்றும் உங்கள் நினைவுடன்
“ஆனந்தபுர விடிவெள்ளிகள்”
தமிழீழத் தேசியத் தலைவரின் நிழல்களில் ஒன்று.
“படையக பயிற்சி கல்லூரிப் பொறுப்பாளர் சிறப்புத்தளபதி”
கேணல் கடாபி/ஆதவன்
ஆறுமுகம். அருந்தவச்செல்வன்
யாழ். கொற்றாவத்தை.வல்வெட்டித்துறை.
குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்தவர்…..
அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.
இனம் புரியாத மகிழ்சியோடும், ஒரு விதமான படபடப்போடும் அனைத்துத் தளபதிகளும் தயாராகிக்கொண்டிருந்தார்கள். “ஊஊ” என்ற ஓசையை கிளப்பியபடி விரைந்து வந்த வாகனத்தில் இருந்து இறங்கிய தலைவரை உற்சாகத்தோடு வரவேற்கின்றார்கள் தளபதிகளும், போராளிகளும். எப்போதும் தலைவரோடு கூடவே கடாபி அண்ணையையும் வரவேற்றவர்கள், தமக்குள் பேசிக்கொள்கிறார்கள் “கடாபி அண்ணை சூட்டுப்போட்டியில் கலந்து கொண்டால் தாங்கள் எப்படி வெல்லுறது…”
அனைத்துத் தளபதிகளுக்கும் போட்டிக்கான விதிமுறைகள் கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் 10 ரவைகளையும் குறுப்பீங்காய்(துல்லியமான சூட்டு இடைவெளி) அடிப்பவர்களுக்கே முதலிடம். ஒவ்வொருவரும் தங்களுக்கான ரவைகளை அடித்து முடித்தபோது இறுதி சூட்டாளரான கடாபி அண்ணை துப்பாக்கியைத் தூக்கி இலக்கைக் குறிபார்க்கிறார். அனைத்துத் தளபதிகளும் அவரையே கண்ணை இமைக்காமல் பார்க்கின்றனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் 10 ரவைகளையும் அடித்து விட்டு, கடாபி அண்ணை நிமிரும் போது, கடாபி அண்ணையும் “ஸ்கோரை” (பெறுபேரு) பார்ப்பதற்காக அனைவரும் தலைதெறிக்க ஓடுகின்றனர். “ஒரு ரவுண்ட்ஸ் மட்டும் தான் பிடிச்சிருக்கு” என்று முதல் பார்த்த கமல் சொல்ல, அதைத் தொடர்ந்து எல்லோரும் அதையே சொல்ல, தலைவர் அவர்கள் இலக்கின் பின்பக்கம் செல்கின்றார்.
என்ன அதிசயம் அனைவரும் பிரமித்துப்போனார்கள். ஒரு ரவை போன அதே பாதையால் பத்து ரவைகளும்
போயிருக்கின்றன. கடாபி அண்ணையை அருகழைத்த தலைவர் அவர்கள் ஆரத்தழுவிக்கொண்டார். ஒரு தாய் சாதனை படைத்த தன் பிள்ளையை அணைத்த்துக் கொள்வது போல. அனைவராலும் பிரமிப்போடும் பெருமையோடும் நோக்கப்படும் ஆதவன் என்றளைக்கப்படும் கடாபி அண்ணையின் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் சாதனைகள். சாதாரண மனிதர்கள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளப்பெரும் தியாகங்களையும் சாதனைகளையும் புரிந்துவிட்டு விழி மூடித் துயில் கொள்ளும் இந்த மாவீரனின் வரலாற்றின் சிறு பகுதியை இங்கு தருகின்றேன்.
வடமராட்சி கொற்றாவத்தை என்ற அழகிய ஊரில் 05 சகோதரர்களுக்கு மூத்தவராகப் பிறப்பெடுத்தவர்தான் கடாபி அண்ணை. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த அவருடைய குடும்பத்தின் சுமையை சிறுவயதிலே சுமக்கும் நிலை கடாபி அண்ணைக்கு உருவாகிறது. தந்தையின் வருமானத்தைக் கொண்டு தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியாமல் திண்டாடிய அம்மாவை சாமதானப்படுத்திய 5ம் வகுப்பு படிக்கும் 11 வயதுச் சிறுவனாகிய கடாபியண்ணை, தன்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, தந்தையுடன் இணைந்து பேக்கரி (வெதுப்பகம்) வேலைக்குச் செல்கிறார். பகல் முழுதும் ஓய்வின்றி பேக்கரியில் உழைத்துவிட்டு, இரவு நேரங்களில் “ஐஸ்க்ரீம் கொம்பனி” ஒன்றில் வேலைக்குச் செல்கிறார். இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணைக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தியட்டருக்குப் போய் ஆங்கிலச் சண்டைப் படங்களைப் பார்ப்பதே இவரின் பொழுதுபோக்காகின.
தன் குடும்பத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்துக் கொண்டிருந்த சிறுவனாகிய கடாபி அண்ணைக்கு மறைந்து வாழும் சில விடுதலைப்புலி உறுப்பினர்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களுடைய கொள்கைப் பிடிப்பினாலும், இலட்சியப் பற்றினாலும் ஈர்க்கப்பட்ட சிறுவனாகிய கடாபி அண்ணை, அப் போராளிகளுக்குப் பல வழிகளில் உதவி புரிகின்றார். எதிரியை உழவு பார்ப்பது, உணவுகள் எடுத்துக் கொடுப்பது, போராளிகள் மறைந்து வாழும் இடங்களில் சாதாரண மாணவன் போல காவல் கடமைகளில் ஈடுபடுவது, தகவல்களைப் பறிமாறுவது போன்ற பணிகளின் மூலம் இவரின் ஆரம்பக் கட்ட விடுதலைப் பணி ஆரம்பமாகியது.
தமிழ் மக்களுக்கான விடுதலையின் தேவையை மனசார உணர்ந்து கொண்ட கடாபி அண்ணை அவர்கள் தனது 14வது வயதில் முழுநேர உறுப்பினராக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக் கொள்கிறார். போராளிக்குறிய முழுமையான பயிற்சிகளைப் பெறுவதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இவர், 1984ம் ஆண்டு 6வது பயிற்சிப்பாசறையில் பயிற்சியினை ஆரம்பிக்கின்றார். பிருந்தன் மாஸ்டர், பிரிகேடியர் பால்ராஜ், யான் அண்ணை என இன்னும் பல வீரர்களோடு இவரும் ஒருவராகினார்.
பாலகப் பருவத்திலே பல கஸ்ரங்களைத் தாங்கி, ஓய்வின்றி உழைத்த கடாபி அண்ணாவுக்கு பயிற்சிகள் எதுவும் கடினமாகத் தெரியவில்லை. பயிற்சிகளின் பிரதான பயிற்சியான சூட்டுப் பயிற்சியின் முதல் நாளே இலக்கின் நடுப்புள்ளியில் குறிபார்த்துச் சுட்டு பயிரற்சிப் பொறுப்பாளர் பொன்னம்மான் அண்ணாவின் பாராட்டைப் பெற்றதோடு மட்டும் நின்றுவிடாது, தொடர்ந்து வந்த நாட்களில் பயிற்சிக்காகக் கொடுக்கப்பட்ட அத்தனை ரவைகளையும் இலக்கின் நடுப்புள்ளியில் சுட்டு சிறந்த சூட்டாளராக தலைவர் அவர்களால்த் தெரிவு செய்யப்படுகிறார்.THALI487
கடாபி அண்ணையின் ஒழுக்கத்தையும், நேர்மையையும், திறமையையும் இனங்கண்டு கொண்ட தலைவர் அவர்கள் அவரை தன்னுடைய மெய்ப்பாதுக்காவலராக ஆக்கியதோடு விமான எதிர்ப்பு ஏவுகணைகளைச் சுடும் சிறப்புப் பயிற்சிக்காகவும் தெரிவு செய்யப்பட்டார். சாதாரணப் போராளியாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் தனது பணிகளை ஆரம்பித்த தளபதி கடாபி அண்ணா அவர்கள் கடின உழைப்பால் தனக்கான தகமைகளை வளர்த்துக்கொண்டு உயரிய இராணுவத் தளபதியாக உருவெடுத்தார்.
1986ம் ஆண்டுக் காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து மாணலாற்றுக்கு வந்த கடாபி அண்ணை அவர்கள், தலைவரின் நேரடி நெறிப்படுத்தளின் கீழ் பணிபுரிந்தார். இலங்கை இராணுவம், இந்திய இராணுவம் என மாறி மாறி தலைவரை உயிருடன் பிடிக்க முயன்று தோற்றுப்போன அத்தனை நடவடிக்கைகளையும் முறியடித்துப் போராடி தலைவரைப் பாதுகாத்த வீரமும் விவேகமும் கொண்ட போராளிகளில் கடாபி அண்ணையும் ஒருவராகிறார்.
கொடுக்கப்பட்ட பணி எதுவாயினும் தூரநோக்குச் சிந்தனையோடும், நுணுக்கத்தோடும், அழகாகவும் செய்யும் இவர் திறனை அடிக்கடிப் பாராட்டும் தலைவர் அவர்கள் தமிழ் நாட்டில் இருந்து தன்னைச் சந்திக்க வந்திருந்த வைக்கோ அண்ணையை தமிழ் நாட்டுக்குக் கொண்டு சென்று விடும் மிக மிக முக்கிய பொறுப்பை கடாபி அண்ணையிடம் ஒப்படைக்கிறார்.
வைக்கோ அண்ணையை பாதுகாப்பாக் கூட்டிச் செல்லும் போது, முல்லைத்தீவு கடற்பகுதியில் ஏற்பட்ட சமரின்போது கடாபி அண்ணை பலத்த காயம் அடைகிறார். அந்நிலையில் கூட தன்னை சுதாகரித்துக்கொண்டு வைகோ அண்ணையை எதிரியிடமிருந்து பாதுகாத்து, தமிழ்நாட்டில் பாதுகாப்பாகச் சேர்ப்பிக்கின்றார். பலத்த காயம் ஏற்பட்டதால் இந்தியாவிலிருந்தே மருத்தவம் பெறவேண்டிய சூழல் கடாபி அண்ணைக்கு ஏற்படுகின்றது. 06 மாதங்கள் இந்தியாவிலிருந்து கொண்டே மருத்துவ உதவியைப் பெற்ற கடாபி அண்ணை மீண்டும் ஈழம் திரும்பி வந்து, தலைவரின் நேரடி நெறிப்படுதலின் கீழ் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஆரம்ப காலங்களில் “கடல்புறா” என பெயர் கொண்டழைக்கப்பட்ட கடற்புலிகள் படையாணிக்கு கேணல் சங்கர் அண்ணை அவர்களே பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். சங்கர் அண்ணை அவர்களை வேறு ஒரு பணிக்காக தலைவர் அவர்கள் நியமித்துவிட்டு கடல்புறாவின் தளபதியாக கடாபி அண்ணை அவர்களை தலைவர் அவர்கள் நியமித்தார்.
கடல்புறாவை செவ்வென கட்டியெழுப்பும் பணியில் கடாபி அண்ணை அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை 1991ம் ஆண்டு நடைபெற்ற ஆகாய கடல் வெளி மரபுவழித் தாக்குதலின் போது வெற்றிலைக்கேணிப் பகுதியால் பெரும் படையோடு ஊடறுத்த இராணுவத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியபோது கடாபி அண்ணை நெஞ்சினில் பலத்த காயம் அடைகிறார். சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கடாபி அண்ணை அவர்களை தலைவர் அவர்கள் அழைத்து இம்ரான் பாண்டியன் படையணியின் உள்ளகப் பாதுகாப்புப் பொறுப்பாளராக நியமிக்கிறார். தலைவரின் பாதுகாப்பு, போராளிகளின் தேவைகள், தாக்குதல், பயிற்சி, புலனாய்வு என பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டபோது ஓய்வின்றி உழைத்தவர் கடாபி அண்ணை.
மாத்தையா அவர்களின் துரோகத்தனத்தை இனம்கண்டு, உறுதிப்படுத்திய பின்னர், பல வழிகளில் விசாரணைகள் நடந்தபோதும், மேலதிகமான, கடுமையான, இறுதிக்கட்ட விசாரணைகளை நேரடியாக மேற்கொண்டவரும் கடாபி அண்ணை அவர்களே.
முன்னேறிப்பாய்ச்சல்” என்ற பெயரில் இலங்கை இராணுவம் மேடிற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக புலிகள் நடத்திய “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் படைக் கட்டுமானத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுவரை இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த மூத்த தளபதி சொர்ணம் அவர்கள் கூட்டுப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அதே நேரம் கடாபி அண்ணை அவர்கள் இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத்தளபதியாக நியமிக்கப்பட்டார்.
1995ம் ஆண்டு யூலை மாதத்திலிருந்து 2002ம் ஆண்டுவரை, அதாவது விடுதலைப்புலிகளுக்கும் அரச படைகளுக்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டவரை கடாபி அண்ணை அவர்களே இம்ரான் பாண்டியன் படையணியின் சிறப்புத்தளபதியாகப் பணியாற்றினார்.
Fightersஇம்ரான் பாண்டியன் படையணியென்பது சிறப்பு அணிகளின் கூட்டமைப்பாகவே இருந்தது. கடாபி அண்ணை பல சிறப்பு அணிகளை அப்படையணியின் கீழ் உருவாக்கி விடுதலைப்பயணத்தில் பல சாதனைகளை ஏற்படுத்தினார். கரும்புலி அணி, லெப் கேணல் விக்டர் கவச எதிர்ப்புப்படையணி, லெப் கேணல் ராயன் கல்விப்பிரிவு, மயூரன் பதுங்கிச்சுடும் அணி, செம்பியன் வேவு அணி, கேணல் சங்கர் ஆள ஊடுருவித்தாக்கும் அணி, லெப் கேணல் ராதா வான்காப்புப் படையணி, விடுதலைப்புலிகளின் கவசப்படையணி போன்ற சிறப்புப் படையணிகளும் படையத் தொடக்க கல்லூரிகள் போன்ற படைக்கட்டுமானங்களையும் தலைவரின் எண்ணத்திற்கேற்ப்ப உருவாக்கி, வளர்த்து, வழிநடத்தியதில் கடாபி அண்ணையின் தலமைத்துவப்பணிகளின் சிறப்புகளை காணக்கூடியதாக இருந்தது.
இப்பணிகளோடு மேலதிகமாக தலைவரின் பாதுகாப்பு சார்ந்த பணிகளையும் நேரடியாகக் கண்காணித்து வந்த கடாபி அண்ணை விடுதலைப்பணிக்காக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருந்தார். ஒரு பயிற்சிப் பணியாக இருந்தாலும் சரி அல்லது வேவுப் பணியாக இருந்தாலும் சரி, அல்லது தாக்குதல் பணியாக இருந்தாலும்சரி நேரமெடுத்து திட்டமிடலுக்காகவே கூடிய நேரத்தை ஒதுக்கி ஒவ்வொரு பணியையும் சரியாக நிறைவேற்றும் பாங்கு கடாபி அண்ணைக்கு உரியதே. பயிற்சித் திட்டமிடல் பற்றிக் குறிப்பிடவேண்டும் என்றால் ஒரு காலத்தில் குறிப்பிட்ட பயிற்சிக்கு மூன்று மாதங்கள் என திட்டமிடப்பட்டிருக்கும். ஆனால் எதிரியின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரிக்கும்போது இப்பயிற்சிக் காலத்தை சுருக்க வேண்டிவரும். அப்போதுகூட குறுகிய கால பயிற்சித் திட்டமிடல் ஒன்றை தயார் செய்துவிட்டே பயிற்சிகள் வழங்கப்படவேண்டும் என்பதில் கவனமாய் இருப்பார்.
அதே போல் தாக்குதல் நடவடிக்கை ஒன்றைப் பூர்த்தி செய்தாலும் அத்தாக்குதலின் வெற்றி தோல்வி என்பதைவிட அத்தாக்குதல் தொடர்பான விபரங்களை ஆவணப்படுத்துமாறே தாக்குதலணிப் பொறுப்பாளர்களிடம் கண்டிப்பாக கட்டளையிடுவார். அத்தாக்குதல் வெற்றியடைந்ததற்கான காரணங்கள் அல்லது தோல்வியடைந்ததற்கான காரணங்கள் எதிர்காலத்தில் எவ்வாறான விடயங்களை மேம்படுத்தலாம் என்பன போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகவே அவ் ஆவணங்கள் தயாரிக்கப்படும். அவ்வாறு தயாரிக்கப்படும் ஆவணங்களை தானே சரிபார்த்து போராளிகளுக்குப் புரியவைப்பார்.
அத்தோடு இவ்வாறு பெறப்படும் ஆவணங்கள் அனைத்தும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கேற்ப திருத்தங்கள், மாற்றங்கள் பயிற்சிகளில் செய்யப்படும். இவ்வாறு இறுக்கமான கால கட்டங்களின் போதும் மரபுவழி இராணுவங்களுக்கு ஒப்பான திட்டமிடல்களையும், செயற்பாடுகளையும் பேணிவருவதில் மிகமிகக் கவனமெடுத்து செயல்ப்பட்டு வந்தவர்தான் கடாபி அண்ணை.
கடாபி அண்ணையை பொறுத்தவரையில் தாக்குதல்களோடு சம்மந்தப்பட்ட தாக்குதலணிகளை மட்டுமன்றி பயிற்சிகள், விசாரணைகள், புலனாய்வு, ஆசிரியர்கள் போன்ற நிர்வாக ரீதியிலான அணிகளையும் நிர்வகிப்பது, முகாம்களை சீரமைப்பது, பராமரிப்பது போன்ற அத்தனை பணிகளையும் சிறப்பாக செய்யும் வித்தகராகத் திகழ்ந்தார். பன்முகப்படுத்தப்பட்ட பணிகளையாற்றிய கடாபி அண்ணை அவர்கள் பெண் போராளிகளின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தவராவார். 027ஆரம்ப காலங்களில் பெண்போராளிகளுக்கு கனரக ஆயுதப்பயிற்சியை வழங்கியதுடன் சூட்டுப்பயிற்சி, சீறோயிங் கனரக ஆயுதங்களை கையாள்வது, ஆயுதங்களை பராமரிப்பது என எல்லாவற்றையும் ஆழமாக கற்பித்து பல கனரக ஆயுத பெண் ஆசிரியர்களை உருவாக்கியவரும் இவரே. அத்தோடு கல்வியறிவு இல்லாமல் எழுத வாசிக்க கஷ்டப்படும் போராளிகளுக்கு அறிவூட்டல்களைச் செய்வதோடு கல்வியில் ஆர்வத்தை தூண்டுவதற்காகச் சிறிய விடயங்களைக் கூட பாராட்டி அன்பளிப்புப் பொருட்களைக் கொடுத்து அவர்களை ஊக்குவித்ததோடு கல்வியறிவில்லாமல் யாருமே இருக்கக் கூடாதென்பதில் அதீத கவனமெடுப்பார்.
அனைவருடனும் சம நிலையில் பழகும் இவருக்கு தனிப்பட்ட நண்பர்கள் என்று யாருமே இருந்ததில்லை. அனைவருடைய கருத்திற்கும் மதிப்புக்கொடுக்கும் இவர் சிறியவர், பெரியவர் என்ற பேதம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதை போராளிகளுக்கு புரியவைத்து, அனைவருடைய கருத்துக்களையும் பொறுமையாகக் கேட்டு, அவர்களுக்குரிய தீர்வுகளை உடனுக்குடன் வழங்குவார்.
இவருடைய தாக்குதல் நடவடிக்கைகளை பொறுத்தவரை சிறப்பு இராணுவ நடவடிக்கைகளில்தான் இவர் நேரடியாகப் பங்குபற்றினார். பல கரும்புலித்தாக்குதல்களுக்கு பயிற்சிகளை வழங்கியதோடு நின்றுவிடாது பல தாக்குதல்களையும் நெறிப்படுத்தி வெற்றியீட்டிய பெருமை இவரையே சாரும். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் இவருக்கு வழங்கப்பட்டிருந்த விமான எதிர்ப்பு ஏவுகணையைக் கொண்டு 1995 ம் ஆண்டு எம் இனத்தை குண்டுபோட்டு கொன்றுகுவித்த இரு அவ்றோ விமானத்தை சுட்டு வீழ்த்தி தனித்துவமான பெரும் சாதனையை ஈட்டி தமிழீழ தேசியத்தலைவரின் பாராட்டைப் பெற்றார்.
1997 ம் ஆண்டு முல்லைத்தீவு கடலில் உக்கிரமாக சண்டை நடந்துகொண்டிருந்த போது, எதிரியோ மிகப்பலத்தோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தான். எதிரியின் மிகவும் பலமான தாக்குதலாக உலங்குவானூர்தியால் தாக்கிக்கொண்டிருந்தான். தமிழீழ விடுதலைப் புலிகளின் படகு மூழ்க ப் போகும் சூழ்நிலையில் யாருமே எதிர்பாராத விதமாய் கடாபி அண்ணை அவர்கள் எதிரிக்கு மிகப்பலமாக இருந்த உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தினார். களத்தில் நிலவரம் மாறியாது. அத்தனை வீரர்களும் எதுவித சேதமும் இல்லாமல் தளம் திரும்புகிறார்கள். தளம் திரும்பிய அந்த வீரர்கள் சாவின் விளிம்பிலிருந்து தம்மைக் காப்பாற்றிய கடாபி அண்ணையைப் பார்த்து கண்ணீர்மல்க நன்றி கூறினார்கள். இப்படித்தான் நீளும் நினைவுகளாக கடாபி அண்ணையின் சாதனைகள் தொடர்ந்தன.
ஜெயசிக்குறு சமர் உக்கிரமடைந்து கொண்டிருந்தது. பல சாதனைகளோடும் பல இழப்புகளோடும் அச்சமர் தொடர்ந்து கொண்டிருக்கையில், விஞ்ஞான குளத்தில் எதிரியானவன் பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையை செய்வதற்குத் திட்டமிட்டிருந்தான். முற்றுமுழுதாக விடுதலைப்புலிகளை சிதைப்பதற்கான ஏற்பாடு. இதை அறிந்துகொண்ட கடாபி அண்ணை அவர்கள் தனது ஆழுகையின் கீழ் இருந்த கரும்புலி அணியொன்றை எதிரியின் கொலைவலயத்திற்குள் அனுப்பி அத்தாக்குதலை முறியடிப்பதற்கான ஏற்பாட்டை செய்தார். அத்தாக்குதலைத் திட்டமிட்டு செயற்படுத்துவதற்காக வந்த அதிகாரிகள் கொண்ட உலங்குவானூர்தியை எதிரியின் பிரதேசத்திற்குள் வைத்து சுட்டுவீழ்த்தி அத்தாக்குதலை முறியடித்து, அங்கிருந்து தப்பி வருகிறார்கள் கரும்புலி வீரர்கள். இத்தாக்குதலை திட்டமிட்டு நேரடியாக நெறிப்படுத்தியவரும் எம் கடாபி அண்ணை அவர்களே.
அது போலவே அளம்பில் கடற்பரப்பில் 1999 ம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த டோறாக்களை ராங்கைப் (பிரங்கி) பயன்படுத்தி அழித்தொழித்தவரும் கடாபி அண்ணையே. குறிபார்த்துச் சுடும் தனித்திறமை கொண்ட கடாபி அண்ணை அவர்கள் எப்பணி ஆற்றினாலும் அதில் ஓர் தனித்துவம் இருக்கும். ஒரு தடைவை தமிழீழத் தேசியத்தலைவருக்கு புதிய கனரக ஆயுதமொன்று கிடைக்கப் பெற்றது. அதை இயக்கம் முறைக்குரிய ஆவணம் எதுவும் வரவில்லை. அந்த ஆயுதத்தை எப்படி இயக்குவது, எப்படி கழட்டிப் பூட்டுவது என்பதை கண்டுபிடிக்குமாறு தேசியத் தலைவர் அவர்கள் சில பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார். பல ஆங்கிலப் புத்தகங்களை புரட்டியும், தாமாக சில நாட்கள் முயன்றும் முடியாமற் போகவே தேசியத்தலைவர் அவர்களிடம் சொன்னார்கள் “கண்டுபிடிக்க முடியவில்லை” என்று. அவர்களைப் பார்த்து புன்முறுவல் பூத்த தேசியத்தலைவர் அவர்கள் வேறோர் பணிக்காக வேறு இடத்தில் நின்ற கடாபி அண்ணையிடம் அந்த ஆயுதத்தை கையளித்தபோது, அந்த ஆயுதத்தை வாங்கிய கடாபி அண்ணை அவ் ஆயுதத்தை இருபக்கமும் திருப்பிப் பார்த்துவிட்டு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் பல பாகங்களாகப் பிரித்து வைத்துவிட்டு, இயக்கும் முறையை புரிய வைத்துவிட்டு, தேசியத் தலைவரை பார்த்தபோது தேசியத்தலைவர் அவர்கள் கடாபி அண்ணையின் தோளில்தட்டி “இதுதான் கடாபி” என அனைவரையும் பார்த்துக் கூற, அனைவரும் இணைந்து பாராட்டியபோது எதுவும் நடவாததுபோல் சாதாரணமாகவே இருந்தார் கடாபி அண்ணை அவர்கள்.
பற்பல ஆற்றல்களைக்கொண்ட இவரிடம் தேசியத்தலைவர் அவர்கள் சொல்கிறார் “கடாபி கடல் இண்டைக்கு அமைதியாக இருக்கா? என்று சூசையை தொடர்பெடுத்து கேளு. கடல் அமைதியாக இருந்தால் நாங்கள் கடற்பயிற்சிக்கு போகலாம்” சொல்லி சில கணங்கள் கூட ஆகவில்லை வானத்தில் உள்ள வெள்ளியை பார்த்துவிட்டு “அண்ணை கடல் இண்டைக்கு நல்ல அமைதியா இருக்கு நாங்கள் கடற்பயிற்சிக்கு போகலாம்” என்றார். வானத்திலுள்ள நடசத்திரங்களை கணித்தே கடலின் நிலவரத்தை சொல்லுமளவிற்கு திறமையுள்ளவர்தான் கடாபி அண்ணை .
தமிழீழ தேசியத்தலைவர் அவர்களோடு கூடவே இருந்து பல விடயங்களைக் கற்று அறிந்து செயலாற்றிய வித்தகர்தான் இவர். தனது குடும்பத்தில் அதிக பற்றுக்கொண்டவர் . தனது மனைவி பிள்ளைகளோடு கழிக்கும் நேரம் மிகச் சொற்பமே. என்றாலும் கிடைக்கும் நேரங்களில் தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாகவும் செயற்பட்டார். நற்சிந்தனைகளையும் தேசப்பற்றையும் ஊட்டியே வளர்த்தார்.
சின்னச் சின்ன விடயங்களில்கூட அதிக அக்கறை எடுத்து செயல்ப்படும் கடாபி அண்ணை அவர்கள் படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரிகளில் சிறப்புத் தளபதியாக இருந்த காலங்களில் புதிய போராளிகளை உள்வாங்கி அவர்களுக்கான திட்டமிடல்களை வகுத்து மிகமிக அற்புதமாக புதிய பயிற்சியாளர்களை நல்ல போராளிகளாக்கினார். கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து பயிற்சி முகாம்களில் பயிற்சிகள் வழங்கப்படும். புதிய போராளிகளுக்குரிய கட்டமைப்புகளை சீரமைத்து, பயிற்சிகளை வழங்கி, நல்ல போராளிகலாக ஆக்குவது மிகமிக கடினமான பணி. ஒவ்வொரு பிரதேசங்களில், இடங்களில் இருந்து வருபவர்கள் வேறுபட்ட குணவியல்புகளோடு இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. கடாபி அண்ணை அவர்கள் சரியாக திட்டமிடல்களை வகுத்து பயிற்சி ஆசிரியர்களை அதற்குரிய வகையில் நெறிப்படுத்தி மிகமிக எளிதாக அப்பணியை ஆற்றினார்.
2006 ம் ஆண்டிலிருந்து எதிரியின் தொடர் விமானத்தாக்குதலில் அடிக்கடி தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்குகள் தாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. நாளுக்குநாள் போராளிகள், மக்கள் என தினமும் பலர் காயப்பட்டும் இறந்துகொண்டும் இருந்தனர். அந்தக் காலங்களில் பலதடைவைகள் படையத் தொடக்க பயிற்சிக் கல்லூரிகளை இலக்குவைத்து விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஒரு தடைவை கூட ஒரு போராளியோ அல்லது பயிற்சியாளரோ காயப்படவுமில்லை வீரச்சாவு அடையவுமில்லை. அவ்வளவு அழகாக திட்டமிட்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் போராளிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் அனைத்து இடங்களிலும் நிலைகள் அமைக்கப்பட்டிருந்தது. பல தடைவைகள் நடந்த விமானத் தாக்குதலின்போதும் அத்தனை புதிய போராளிகளையும் காப்பாற்றியது கடாபி அண்ணையின் மதிநுட்பமான திட்டமிடலுடன் கூடிய செயல் மட்டுமே.
தலைவர் அவர்கள் பல தடைவைகள் பொறுப்பாளர்களுக்கு சொல்லியிருந்தார் “கடாபியால் மட்டும் எந்த இழப்புமின்றி போராளிகளை காப்பாற்ற முடியுதென்றால் ஏன் உங்களால் முடியுதில்லை” என்று.
புதிய பயிற்சியாளர்களிடமிருந்து கூட கருத்துக்களை பெறவேண்டும் என்பதில் அக்கறையெடுப்பார். வாரத்தில் ஒருதடைவை தானே சென்று பயிற்சியாளர்களுடன் கதைப்பார். அவர்கள் தாமாக கருத்துக்களை முன்வைக்க மாட்டார்கள் என்பதால் அனைவரிடமும் காகிதமும் பேனாவும் கொடுத்து “உங்கள் பெயர்களை எழுதாமல் சொல்ல விரும்பும் கருத்துக்களை எழுதித்தாருங்கள். நான் ஏதாவது பிழைவிட்டிருந்தால்கூட நீங்கள் எழுதலாம். நீங்கள் எழுதும் விடயம் சரியாக இருந்தால் நிச்சயமாக அதற்கான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்பார் . அதேபோலவே பயிற்சி ஆசிரியர்களிடம் புதிய போராளிகளை வழிநடத்துவது, அறிவுரைகளை பலதடைவைகள் வலியுறுத்துவார். பயிற்சிகள் வழங்குவதோடு போராளிகள் சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் மிக மிக கவனமாக இருப்பார். அத்தோடு முன்மாதிரிகளாக ஆசிரியர்கள் திகழவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பார்.
எமது போராட்ட வரலாறுகள், ஒவ்வொரு நிகழ்வின் பதிவுகளும் மிகமிக முக்கியமென கருதுவார். எந்த இக்கட்டான சூழலிலும் அனைத்து நிகழ்வுகளும் உண்மையாக பதிவுசெய்து ஆவணப்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டுவார். அப்பணியை முக்கிய பணியாக கருதி அதற்காக போராளிகளைத் தெரிவு செய்து தானே அப்பணியை நேரடியாக நெறிப்படுத்துவார். இறுதிச்சமர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளைகளில் கடாபி அண்ணை அவர்களில் சண்டைக் களங்களில் பணியாற்றிகொண்டிருந்தார். அந்த நேரத்திலும்கூட அவணங்களை பதிவு செய்து பாதுகாக்கும் போராளியைத் தொடர்புகொண்டு அப்பணியின் முக்கியத்துவத்தை விளங்கப்படுத்தி எச்சந்தர்ப்பத்திலும் இப்பணியை இடைவிடாது தொடருமாறு வலியுறுத்துவார்.
இவ்வாறு பலவேறு விடுதலைப்பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த கடாபி அண்ணை அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரப்பகுதியில் பெருமெடுப்பில் நடந்த யுத்தத்தில் ஒரு பகுதி தாக்குதல் தளபதியாக களமிறங்கினார். தடைசெய்யப்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிரியானவன் புலிகளை அழிப்பதில் முனைகிறான். வாழ்வா? சாவா? என்ற பெரும் யுத்தக்கத்தில் ஒவ்வொரு போராளிகளும் உறுதியோடு போரிட்டு வீரச்சாவு அடைகிறார்கள். எதிரியின் துரோகத்தனத்திற்கு பலியாகவேண்டிய இக்கட்டான சூழல் அது.
கடாபி அண்ணை அவர்கள் தன் அணிக்கு கட்டளை வழங்கி போரிட்டுக் கொண்டிருந்தவேளை எதிரியின் தாக்குதலில் பலத்த காயமடைகிறார். போராளிகள் பலர் அவரைக் காப்பாற்ற முனைகின்றனர். முடியவில்லை……
தமிழீழத் தேசியத்தலைவரையும், தமிழீழத்தையும் தன் உயிர் மூச்சாகக்கொண்ட கடாபி அண்ணை அவர்கள்……..
“அண்ணையை காப்பாற்றுங்கோ அண்ணைக்கு உறுதுணையாய் இருங்கோ” என அருகில் இருந்த போராளிகளிடம் முணுமுணுத்தபடி அன்னை மண்ணை அரவணைத்தார்.
அப்பெரும் யுத்தகளத்தில் தீரமுடன் போராடி வீரச்சாவடைந்த பிரிகேடியர் ஆதவன் அல்லது கடாபி என அழைக்கப்படும் சாதனை வீரனை நினைவு கூருவதோடு அக்களத்தில் வீரமுடன் போரிட்டு வீரச்சாவடைந்த அனைத்து போராளிகளையும் நினைவு கூருகிறோம்.
உலகத்தில் வாழும் தாய்களுக்கெல்லாம் பெருமை தேடித்தந்தாள் ஆனந்தபுரத்தில் எங்கள் தமிழ்செல்வி. உக்கிரமான போர்க்களம் என்று தெரிந்து கொண்டும் இரண்டு வயதுக் பெண்குழந்தையை அருகிருந்தவர்களிடம் விட்டுக் களம் புகுந்தவள் இவள்.
கள நிலவரங்களைத் தெரிந்து கொண்டும் தான் பெற்ற பிள்ளையை விட்டு தன் தாய் நிலம் காக்க ஓடியவள் இவள். களத்தில் தன் தளபதி பிரிகேடியர் விதுசாக்காவிற்குப் பக்கதுணையாக நின்று போர் புரிந்தவள் இவள். தளபதிகளான பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா அக்களத்தில் வீரச்சாவைத் தழுவிய போது, அனைத்துப் பெண் போராளிகளையும் ஒழுங்குபடுத்தி, வழிநடத்திப் போர் புரிந்தவள் இவள் . களத்தில் தான் வீரமரணம் அடைவது உறுதி எனத் தெரிய வந்த போது, தன் தோழிக்கு தொலைத்தொடர்பு மூலம் சொன்னாளாம்