சிறீலங்கா தமிழின அழிப்பை அம்பலப்படுத்தும் சாட்சியங்கள் இன்று பிரான்சு Chevilly-Larue நகரசபை முன்பாக

இலங்கை சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கத்தின் திட்டமிட்ட தமிழின ஒடுக்குமுறை அழிப்பு இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.சர்வதேசத்தின் மனித உரிமை அமைப்புக்களின் கண்டனங்கள் ஐநா மனித உரிமை சபையின் தீர்மானங்கள் என்பவற்றை புறந்தள்ளி சிறீலங்கா அரசாங்கம் எதேச்சாதிகாரத்தை தமிழர் தாயகப்பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றது.கைதுகள் அச்சுறுத்தல்கள் என தமிழினம் ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் முள்ளிவாய்க்கால் போரின் பின்னாக அடைக்கப்பட்டிருக்கின்றது.முள்ளிவாய்க்காலில் மனிதகுலத்துக்கு எதிரான கொடுரங்களை மேற்கொண்ட சிங்களப்படைகளையும் அதை வழி நடத்தியவர்களையும் சர்வதேச நீதிமன்றுக்கு முன் நிறுத்த தமிழினம் இப்பொழுது அடக்குமுறைக்குள் போராட வேண்டியிருக்கின்றது.கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழினம் சர்வதேசத்தை நோக்கி நீதி கோரி நிற்கின்றது. சர்வதேசத்தின் மனச்சாட்சி திறக்கவேண்டும் என்பதற்காக புலம்பெயர் மண்ணில் பல்வேறு போராட்ட வடிங்களுடாக தமிழினம் உலகத்தின் கதவுகளை நீதிக்காக தட்டிவருகின்றது.

அந்த வகையில் பிரான்சை மையமாக கொண்டு இயங்கும் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன சிறீலங்கா அரசாங்கங்களின் தமிழின அழிப்பு ஆவணங்களை ஆதாரங்களை திரட்டி சர்வதேச நாடுகளின் முக்கிய மையங்களின் முன் பார்வைக்கு வைத்து சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழின அழிப்பு முகத்தை உலகத்துக்கு அம்பலப்படுத்தி வருகின்றார்கள்.இந்த இனவழிப்பு ஆதாரங்களை மனித உரிமை ஆர்வலர்கள் மக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலதரப்பு பார்வையிட்டு தங்கள் கவலை வெளிப்படுத்துவதுடன் தமிழின நீதி கோரும் செயற்பாட்டுக்கு தங்கள் ஆதரவையும் உறுதிப்படுத்தி செல்வதையும் காணமுடிகின்றது.அந்த வகையில் இன்று பிரான்சு 88 Avenue du Général de Gaulle, 94550 Chevilly-Larue நகர சபை முன்பாக தமிழின அழிப்பு ஆதாரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பரப்புரைகள் இடம்பெற்றுள்ளன.