சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தனது 87வது வயதில் காலமானார்.

126

சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி தனது 87வது வயதில் காலமானார்.

எங்கோ ஒரு மூலையில் யார் செத்தால் எனக்கென்ன என்று நினைக்காமல், அவமானம், அவதூறு, அடி உதை, சிறை, கொலை மிரட்டல், அனைத்தையும் சகித்துக் கொண்டு, தனது வாழ்நாளை முழுமையாக மக்கள் பணிக்காக செலவிட்ட ஒரு உத்தமரின் மரணம் பெரும் கவனத்தைப் பெறவில்லையோ என மனம் கலங்குகிறது.

சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால், போக்குவரத்துக் காவல்துறை இவருக்கு ஓர் அடையாள அட்டையை வழங்கியது. அது முதல் டிராஃபிக் ராமசாமி என்று அழைக்கப்பட்டார்.

விதியை மீறினால் அவர்கள் பெரிய அரசியல் தலைவராக இருந்தாலும் சரி, பெரிய முதலாளியாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது வழக்கு தொடுத்து ஒரு வழிசெய்துவிடுவார் டிராபிக் ராமசாமி.

300க்கு மேல் அவர் தொடுத்த பொது நல வழக்குகளில் நிகழ்த்திய மாற்றங்கள் சில:

2002ல் சென்னையில் அனுமதியின்றி அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை.

அனுமதி பெறப்படாமல் Digital Banners / Placards வைக்கப்படுவதற்கு எதிராக இவர் தொடர்ந்த வழக்கு காரணமாக, தமிழகம் முழுவதும் கட்-அவுட் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது.

சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார்.

அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்கு சென்றவர்.

வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றித் தானே வாதாடுவது இவர் வழமையாகும்.

2009 நாடாளுமன்றத் தேர்தல், 2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடை தேர்தல், 2015 சென்னை ஆர்.கே.நகர் தொகுதி என்பவற்றில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இம்முறை 2021 சட்டமன்ற தேர்தலில் ஊழலை ஒழிக்க நல்லாட்சி இயக்கம் என்று ஒரு இயக்கத்தைத் தொடங்கி அந்த இயக்கம் சார்பில், சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட இருந்தார்.

தேர்தலில் மக்கள் பணி செய்யும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களுக்கு கொண்டு சேர்க்க பாடுபட்டார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”

அன்னாரின் சேவைகளை மனதில் நிறுத்தி, கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்கி அவர் நினைவைப் போற்றுவோம்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் !