அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உச்சி மாநாடு ஜெனிவாவில் புதன்கிழமை நடந்தது.

273

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புதின் இருவரது சந்திப்பும் உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா – ரஷ்யா இடையே தொடர்ந்து மோதல் வலுத்துவரும் நிலையில், அமெரிக்கா, ரஷ்யா இடையிலான உச்சி மாநாடு ஜெனிவாவில் புதன்கிழமை நடந்தது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் புதினும் நேரில் சந்தித்துக் கொண்டனர்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு, ரஷ்ய அதிபர் புதினுடன் கலந்துகொண்ட முதல் சந்திப்பு என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்தச் சந்திப்பு சுமார் 65 நிமிடங்கள் நடைபெற்றதாகவும், சைபர் தாக்குதல், அலெக்ஸ் நவால்னி, உக்ரைன் போர், கரோனா குறித்த முக்கிய ஆலோசனைகள் இதில் இடம்பெற்றதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இரு நாட்டுத் தூதரக அதிகாரிகள் மீண்டும் தங்கள் பணிக்குத் திரும்ப உள்ளதாக இரு நாட்டுத் தலைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர், புதினைக் கொலைகாரர் என பைடன் விமர்சனம் செய்தார். இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தூதரக அதிகாரிகளும் அவரவர் நாடுகளுக்குத் திரும்பினர். இந்த நிலையில் மூன்று மாதங்களுக்குப் பின்னர் அவர்கள் தங்கள் பணிக்குத் திரும்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.