அதிஸ்டலாபச்சீட்டின் ஊடாக தமிழினநீதி கோரும் போராட்டத்திற்கு உதவ அனந்தி அழைப்பு.

மிகக்கொடுரமான ஒரு தமிழின அழிப்பை செய்து விட்டு அதை மறைத்துக்கொண்டும் அதற்கு நீதி தர மறுத்துக்கொண்டும் இலங்கை அரசு செயல்பட்டு வருகின்றது

எனவே சர்வதேசம் எங்கும் தமிழினப்படுகொலை செய்தி அறியப்படுத்தப்படும் பட்சத்திலேயே இனப்படுகொலைக்கு நாடுகளின் ஆதரவுடன் நீதியை பெறமுடியும் அதற்கு போராட்டங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தமிழர் தாயகத்தில் இருந்து அழைப்பு விடுத்துள்ளார்.

தற்பொழுது ஐநா மற்றும் பிரான்சு நாட்டின் நகரசபைகளின் முன் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கமும் அதன் செயற்பாட்டாளர் கஜனும் மற்றும் தமிழ் பண்பாட்டு வலையமும் இணைந்து தமிழினப்படுகொலை ஆதார நிழற்படங்களை வைத்து கவனயீர்ப்பு தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.மனித உரிமைச் செயற்பாட்டாளர் கஜன் தன் சொந்த முயற்சியிலும் புலம்பெயர்ந்து வாழும் குறிப்பிட்ட சிலரின் ஒத்தாசை உதவியுடன் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இந்த மனிதாபிமான போராட்டத்தை நடத்திவந்துள்ளார்.அதன் மூலம் ஒரு விழிப்புணர்வு சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ளது.எனினும் ஐநாவின் சபையில் இலங்கை மீது ஒரு காத்திரமான சர்வதேச நீதிப்பொறிமுறைக்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படவேண்டுமாயின் அதற்கு வல்லரசு நாடுகளின் மற்றும் அவற்றின் கூட்டு நாடுகளின் பேராதரவு வேண்டும்.அதற்கு அந்தந்த நாடுகளில் தமிழினப்படுகொலை தொடர்பான செய்தியும் ஆதாங்களும் சென்றுசேரவேண்டும் என்பதுடன் அந்தந்த நாட்டு முக்கிய சபைகளில் தீர்மானங்களுடன் கொண்டு வரப்படவேண்டும் எனவே அதற்கு தமிழினப்போராட்டம் விரிவுபடுத்தப்படவேண்டும் அதற்கு நிதி பலம் என்பது மிக அவசியம்.

மனித உரிமைச்செயற்பாட்டாளர் கஜன் இதுவரையில் தன்னால் முடிந்தவரையில் போராட்டத்தை நகர்த்தி வந்துள்ளதுடன் மேலும் இந்த தமிழினப்படுகொலை ஆதாரங்களை ஏனைய நாடுகளிலும் பார்வைக்கு வைத்து அது பற்றிய பரப்புரைகளை மேற்கொள்ள நிதிதேவையாக உள்ளதை உணர முடிகின்றது.அதற்காக அவர்கள் அதிஸ்டஇலாப சீட்டின் மூலம் புலம்பெயர் மக்களை இந்த போராட்டத்தில் ஒரு பங்காளிகள் ஆக்க எடுத்துள்ள முயற்சிக்கு அனைவரும் கைகொடுக்கவேண்டியது அனைத்து தமிழ் மக்களினதும் கடமை. நான் தாயகத்தில் இருந்து அதிஸ்ட லாபச்சீட்டை பெற்று என்னால் முடிந்த நிதிப்பங்களிப்பை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் தொடர் பயணத்திற்கு ஒத்தாசை புரிந்துள்ளேன்.அதுபோல் உலககெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் நீங்களும் ஒன்றோ பத்தோ அதிஸ்ட இலாபச்சீட்டுகளை வாங்கி தமிழின நீதி கோரும் போராட்டத்திற்கு கைகொடுக்கவேண்டும் என உங்களை உரிமையுடன் வேண்டி நிற்கின்றேன் என அனந்தி சசிதரன் அழைப்பு விடுத்துள்ளார்.