முன்னுதாரணமான பதினெட்டு அகவை ஆதவன்

ஆதவனுக்கு அகவை பதினெட்டு பிரான்சில் பெற்றோருடன் வாழும் தமிழீழத்தை சேர்ந்தவர்.அவர் தனது பிறந்த நாளுக்காக தமிழின நீதி கோரும் போராட்டத்திற்கு தன் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஆதவனின் குடும்பம் தமிழீழ தாயகத்தின் மீதும் போராட்டத்தின் மீதும் மிகுந்த பற்றுடையவர்கள்.மனதளவில் மட்டுமன்றி புலம்பெயர் மண்ணில் நடக்கும் கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஐநா சபையின் முன்பும் குடும்பமாக வந்து தங்கள் விடுதலைக்கான பங்களிப்பை தொடர்ந்து செய்து வருகின்றவர்கள்.அந்த வகையில் ஆதவனும் அவரது பெற்றோர்களால் தமிழீழ மண் விடுதலைப்பற்றுடன் வளர்க்கப்படுவது ஆதவனின் முன்னுதாரணமான செயலின் மூலம் புலப்பட்டுள்ளது.

தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் தொடர்ந்து தினமும் கவனயீர்ப்பு போராட்டங்களை செய்து வரும் நிலையில் தமக்கு நிதி ரீதியிலும் தமிழ் மக்களை தோள்கொடுக்கும்படி கோரிக்கைகளையும் கடந்த காலங்களில் முன்வைத்தும் வந்துள்ளனர்.இந்த நிலையில் தனது பதினெட்டாவது பிறந்த நாளையிட்டு ஆதவன் நேரடியாக அனைத்துலக மனித உரிமைச்சங்க செயற்பாட்டாளர் கஜனிடம் வந்து தன் பங்களிப்பாக 100 யூரோக்களை வழங்கி முன்னுதாரணமாக விளங்குகின்றார்.இவ்வாறான தமிழீழ மண் பற்றாளர்களின் ஒத்தாசையும் செயலும் தொடர்ந்து தமிழினத்திற்கு சிங்களப் பேரினவாதத்தால் இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரி போராட்டத்தை கொண்டு நகர்த்த பலமாக இருக்கும் என கஜன் தெரிவித்துள்ளார்.இதே வேளை இந்த தாயகத்தின் விடிவுக்காக நற்செயல் ஆற்றிய ஆதவனுக்கு வாழ்த்துக்களும்உரித்தாக்கப்படுகின்றது.