ஆறாத கண்ணீரோடு வழியனுப்பி வைக்கின்றோம். ஈழ தேசத்தின் உன்னத வரலாற்றுத்தந்தை ஐயா!

433

ஆறாத கண்ணீரோடு வழியனுப்பி வைக்கின்றோம்.
ஈழ தேசத்தின் உன்னத வரலாற்றுத்தந்தை ஐயா! செல்வரட்ணம் அவர்கள்.


தாம் பெற்ற பிள்ளைகளை சீராட்டி, தாலாட்டி வளர்த்து ஆளாக்கிய பின் தம் உயிரைவிட மேலாக நேசிக்கும் மண்ணையும், மக்களையும், அவர்களின் விடுதலையையும் நேசித்து துன்பப்படும் தன் இனத்தை அதிலிருந்து விடுபடவைக்க போராடியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டதால் புறப்பட்ட எம் இனத்தில் தம் நான்கு பிள்ளைச் செல்வங்களை உவந்தளித்து இன்று கண்மூடி எங்கள் கண்களில் நிறுத்த முடியாத கண்ணீரையும் ஒரு தேடலையும் தந்து விட்டு சென்றுவிட்டீர்கள்.


எம் குழந்தைக்கு கல் அடித்தாலும், முள்குத்தினாலும், தாங்கிக்கொள்ள முடியாத நாம், தவளும் குழந்தை எழுந்து நடக்கும் போது தவறிவிழுந்து விட்டால் அதன் அழுகையை மறைக்க எம்மை தாங்கிக்கொள்ளும் நிலத்தை ( பூமாதேவியை ) அடித்து, எம்மைத் தாங்கும் பூமித் தாயைவிட, தன் குழந்தைதான் பெரிது என்று வாழ்ந்தது எமது இனம். மனிதவரலாற்றில் தான் பெற்றவர்கள் இறந்தபின் அவர்களுக்கான இறுதிச்சடங்கினை அவர்களின் பிள்ளைகள் செய்வார்கள். ஆனால் இந்த உலகிலே ஈழத்தமிழனின் வரலாற்றில்தான் தாம் பெற்ற பிள்ளைகளுக்கு பெற்றவர்களே இறுதிச்சடங்கினை செய்து வைக்கின்ற வைத்ததொரு வரலாறுகள் எம் நிலத்தில் பலஆயிரம் உண்டு. அதேபோலவே தன்பிள்ளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தேசவிடுதலையை நோக்கி சென்று ஒன்றன் பின் ஒன்றாய் உயிரற்ற உடலாகவும், உடலற்ற செய்தியாகவும் வரும் போது கண்ணீரையும் அடக்கி வேதனையை காட்டிக்கொள்ளாது அவர்களுக்கான இறுதிச்சடங்கையே செய்ய முடியாது வெளியே ஆசைதீர அழுது கொட்டக்கூட முடியாத சூழலில் இன்று வரை கண்ணியமாய் வாழ்ந்ததொரு உன்னதன் நீங்கள். சிரித்த முகத்துடன், அவ்வப்போது அர்த்தமுள்ள, அறிவுபூர்வமான நகச்சுவை பேச்சுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பும் ஒரு உன்னதனாக வாழ்ந்தவர். இரும்பு இதயம் கொண்டவர்கள் என்ற கதையைப் படித்திருக்கின்றோம். அதனை இவரிலும், இவர் குடும்பத்திலும் தான் நாம் பார்த்திருக்கின்றோம்.

இராணுவ கெடுபிடிகள், மாற்று இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நீங்களும் ஒரு போராளியாக பிள்ளைகளின் தந்தையாக இருந்ததோடு மட்டுமல்லாது. உண்ண உணவும், உடுக்க மாற்று உடைகளை யாருடையது எவருடையது என்று பாராது துவைத்து தந்து ஒவ்வொரு போராளிகளின் அடிப்படைத் தேவைகளை அன்போடு கவனித்தவர்.மூத்த போராளிகள் பலரின் மனதில் என்றும் இடம் பிடித்தவர் நீங்கள். புலத்திற்கு வந்தபோதும் அந்த உன்னதர்களோடு வாழ்ந்த கதைகளையே என்றும் உணர்வோடும், திமிரோடும், வீரத்தோடும் பேரன்போத்திகளோடு பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் மண்பற்றும், பாசமும், இத்தனை இழப்புக்கும் மத்தியில் கொஞ்சம் குறைவடையாது இருப்பதை கண்டு பெருமைதான் நாம் கொண்டோம். தமிழீழ தேசம் தலைநிமிர்ந்து இன்று நிற்குமாக இருந்தால் இன்று இவர் ஓர் நாட்டுப்பற்றாளனாகவும், விடுதலையை நேசித்த தந்தையாகவும் போற்றப்பட்டிரு ப்பார், ஆனால் அது என்றோ ஒருநாள் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு அந்த மதிப்போடும், மாண்போடும் உங்களுடன் வாழ்ந்த, வளர்ந்த, அறிந்த பிள்ளைகள் உறவுகள் நாங்கள் ஆறாத கண்ணீரோடு வழியனுப்பி வைக்கின்றோம்.


கண்கண்ட வரலாற்றை மறப்பதும், மறைப்பது, மறுப்பதும்; தர்மத்தின் காவலன்! உண்மைத் தமிழன்! உன்னத காவலன்! கால்தடம் பற்றி அவன் பாதையில் பயணித்தவரின் செயல் அல்ல. தந்தையே நீங்கள் மீண்டும் எம் மண்ணில் வந்து பிறப்பெடுக்க வேண்டும். நாம் உங்களுக்கு செய்யாது விட்ட கடன் செய்ய வேண்டும். அதுவரை உங்கள் பிரிவால் துவண்டு நிற்கும் அனைவருடனும் எமது துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

தேசத்தை நேசிக்கும் பிள்ளைகளுடன்.

து. மேத்தா, மற்றும். ம.கஐன்.