தொடரும் தமிழினப்படுகொலை நீதி கோரும் போராட்டங்கள் இன்று பிரான்சு பாராளுமன்றம் முன்பாக

அடிக்க அடிக்க அம்மியும் நகருமென்பதுபோல சர்வதேசத்தின் கதவுகளை தொடர்ந்து தட்டும் போதுதான் ஈழத்தமிழினத்துக்காக நியாயமும் நீதியும் கிடைக்கும்

2009ல் தமிழீழ ஆயுத விடுதலைப் போராட்டம் மௌன நிலைக்கு வந்தபின் தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட சர்வதேச ரீதியான ராச தந்திர போராட்டத்தில் அறவழியிலான கவனயீர்ப்பு போராட்டங்கள் முக்கியமானவை இன்றுவரை கடந்த 12 ஆண்டுகளாக தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் அயராத தமிழின உணர்வாளர்களால் இந்த போராட்டங்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன.அதை மழுங்கடிக்க பல்வேறு வகையிலான அச்சுறுத்தல் வஞ்சகப் போர்களை சிங்கள அரசு செய்து வருகின்றது.கொரானாவையே தங்களுடைய இனவாத ஆயுதம் ஆக்கியிருக்கின்ற சிங்களப் பேரினவாதம் உலகத்தை ஏமாற்றும் கபட நாடகங்களில் இருந்து இன்னும் ஓயவில்லை.பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்காமல் அதற்கு பல்வேறு குருட்டு நியாயங்களை சிங்களப் பேரினவாதம் சர்வதேசத்திற்கு சொல்லி வருகின்றது. சில வல்லரசுகளோடு கூட்டுச்சேர்ந்து கொண்டு சர்வதேசத்தை பகைக்கும் சிங்கள பேரினவாதத்தின் நிலையை தமிழர்கள் தங்கள் ராஜதந்திர நகர்வுகளுக்கு சாதகமாக்கி சர்வதேசத்தின் கதவுகளை திறந்து தமிழினத்தின் நீண்ட விடுதலைப்போராட்ட நியாயத்தை ஏற்றுக்கொண்டு தீர்மானங்களுக்கு வர பாடுபட வேண்டிய காலகட்டமாக இது இருக்கின்றது.அந்த வகையில்தான் பிரான்சின் பிரதான ராஜதந்திர மையமான பாராளுமன்றத்தின் முன் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன தொடர் கவனயீர்ப்பு தமிழினப்படுகொலை ஆதாரங்களை வைத்து நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.