தமிழினத்திற்கு தீர்வு கிடைக்கும்வரை தடைகள் தாண்டியும் தொடரும் பயணம்-கஜன்

நாம் ஒரு அரசாங்கத்தோடுதான் மோத வேண்டியிருக்கின்றது.அது தனி நபர் சம்பந்தப்பட்டதல்ல இனப்படுகொலையாளிகளை காப்பாற்ற சிங்கள பேரினவாதம் தங்கள் பெரு நிதியை பயன்படுத்துகின்றது.எனவே அதனோடு எதிர்த்து நிற்க எமக்கும் ஆளணியும் நிதி பலமும் அவசியம் அதை இந்த சந்தர்ப்பத்திலே அனைத்து தமிழ் மக்களிடமும் கோரி நிற்கின்றோம் என கஜன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் சிறீலங்கா அரசாங்கம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பல்வேறு போலி வாக்குறுதிகளையும் அறிக்கைகளையும் தயாரித்து நீத்துப்போகச்செய்து சர்வதேசத்தை ஏமாற்றி கால இழுத்தடிப்பு செய்து தமிழ் மக்களின் போராட்டத்தை மழுங்கடிக்கச்செய்ய சர்வதேச ரீதியில் வேலைகளை முடுக்கியுள்ள இவ்வேளையில் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன இணைந்து ஐநா நோக்கி சிறீலங்கா இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதி மன்றில் பாரப்படுத்து தமிழர்களுக்கு ஒரே தீர்வு தமிழீழம்தான் போன்ற கோரிக்கைளை முன்வைத்து ஆரம்பித்த பயணம் ஆறு நாட்களை கடந்தும் தொடர்கின்ற நிலையில் நீதி கோரும் பயணம் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்றலை வந்தடைந்த நிலையில் அங்கு தமிழினப்படுகொலை ஆதாரங்களான நிழற்படங்கள் வைக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.இதில் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அனைத்துலக மனித உரிமைச்சங்க செயற்பாட்டாளர் கஜன் கருத்து தெரிவிக்கையில்

2009ல் முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை சிறீலங்கா அரசாங்கம் வஞ்சகமான முறையில் அடக்கி ஒடுக்கிபோதும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ் மக்களால் தாயகத்திலும் சர்வதேசத்திலும் சாத்வீக வழியில் மேற்கொள்ளும் போராட்டங்களை தமக்கு அடிமைச்சேவகம் செய்யக்கூடிய தமிழர்களை விலைக்கு வாங்கி இவ்வாறான போராட்டங்களுக்குள் ஊடுருவி மண்டையை கழுவி பின்னடைவுகளை ஏற்படுத்த பல்வேறு எத்தனங்களை மேற்கொண்டாலும் கொள்கையில் விடாப்பிடியாக வழுவாதவர்களால் இன்றுவரை தமிழின விடுதலைப்போராட்டமும் நீதி கோரும் பயணமும் தொடர்கின்றது.இந்த போராட்டங்கள் இன்னமும் விரிவு பெறவேண்டும்.இன்று நாம் இரண்டு அமைப்புக்கள் இணைந்து இந்த பயணத்தை மேற்கொள்கின்றோம்.சில ஊர்திகளை வைத்துக்கொண்டு சிலரது கருணை கூர்ந்த உதவிகள் ஒத்தாசைகளை கொண்டு நகர்கின்றோம்.ஆனால் இது விரிவுபடுத்தப்படவேண்டும்.அவ்வாறு செய்ய வேண்டுமெனில் பலரும் தோள்கொடுக்கவேண்டும்.அது நிதி அடிப்படையிலும் அமையவேண்டும்.சிறுகசிறுக அனைவரும் தரும் நிதி பொருளாதார பலத்தை உருவாக்கி நிலைத்து நின்று சிறீலங்கா அரசாங்கத்தோடு பலப்பரீட்சை செய்ய உதவும்.நாம் ஒரு அரசாங்கத்தோடுதான் மோத வேண்டியிருக்கின்றது.அது தனி மனித நபர் சம்பந்தப்பட்டதல்ல இனப்படுகொலையாளிகளை காப்பாற்ற சிங்கள பேரினவாதம் தங்கள் பெரு நிதியை பயன்படுத்துகின்றது.எனவே அதனோடு எதிர்த்து நிற்க எமக்கும் ஆளணியும் நிதி பலமும் அவசியம் அதை இந்த சந்தர்ப்பத்திலே அனைத்து தமிழ் மக்களிடமும் கோரி நிற்கின்றோம் என கஜன் தெரிவித்துள்ளார்.