பிரான்சில் இரு தினங்கள் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு!

104

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு கடந்த (10.10.2021) ஞாயிற்றுக்கிழமை பொண்டிப் பகுதியிலும் இன்று 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை ஒள்னேசுபுவா பகுதியிலும் மிகவும் சிறப்பாக இடம்பெற்று முடிந்தன.
தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் வளர்தமிழ் 1 தொடக்கம் வளர்தமிழ் 12 வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இச்செயலமர்வு இருபிரிவுகளாக இடம்பெற்றது. இருதினங்களும் காலை 09.30 மணிக்கு அகவணக்கத்தைத் தொடர்ந்து தமிழ்ச்சோலை கீதம் இசைக்கப்பட்டு ஆரம்பமான இச்செயலமர்வில் அண்மையில் கோவிட் பெரும் தொற்றுக்காலப் பகுதியில் சாவடைந்த ஆசிரிய பயிற்றுநர் சிவராஜா ஜெகன் , கொலம்,சேர்ஜி,நந்தியார் தமிழ்ச்சோலை ஆசிரியை இராசநாயகம் உதயமாலா, பொபினி தமிழ்ச்சோலை நிர்வாகி நந்தகுமார் அமுதராணி ஆகியோர் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டது.

வரவேற்புரையினை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் திரு.ஜே.காணிக்கைநாதன் அவர்கள் ஆற்றியிருந்தார். தொடர்ந்து பயிற்றுநர்கள் சிறப்பாக குறித்த செயலமர்வை நிகழ்த்தியிருந்தனர்.
பாடத்திட்டம் மற்றும் பாடக்குறிப்பு விளக்கத்தினை தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியக செயற்பாட்டாளர் ஆசிரியர் திரு.சந்திரராசா அகிலன் அவர்களும், ஆசிரியவாண்மை பற்றி ஆசிரியை திருவாட்டி கைலாயபிள்ளை கமலாவதி அவர்களும், இலக்கணம் தொடர்பில் திருவாட்டி தயாபரி கண்ணதாசன் அவர்களும், இலக்கியம் தொடர்பில் திருவாட்டி உதயராணி திருச்செல்வம் அவர்களும், உளவியல் தொடர்பில் திருவாட்டி கவிதா ஆடியபாதம் அவர்களும் ஆற்றிய அதேவேளை, தொடர்ந்து இலக்கியம் மற்றும் தொழில்நுட்பமூடான தமிழ்மொழிகற்பித்தல் என்ற தலைப்பில் பேராசிரியர் கலாநிதி சிவஞானம் தனராஜா அவர்கள் சிறப்பாக வழங்கியிருந்தார்.
வரலாறு பகுதியினை பயிற்றுநர் திரு.கிருஸ்ணபிள்ளை தவராஜா அவர்களும், கவிதை, கட்டுரை என்னும் தலைப்பில் பயிற்றுநர் திரு.வினாசித்தம்பி பாஸ்கரன் அவர்களும் தற்கால வரலாறு தொடர்பில் ஆசிரியர் திரு.வினாசித்தம்பி மோகனதாஸ் அவர்களும் வழங்கியிருந்தனர்.


பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்களும் உரைநிகழ்த்தியிருந்தார். அவர் தனது உரையில், ஆசிரியர்களின் பணி குறித்துப் பாராட்டியதுடன், இப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், எதிர்வரும் நவம்பர் 27 சனிக்கிழமை மாவீரர் நாளில் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்வதுடன் தங்கள் குடும்பத்தினர் மற்றும் மாணவர்களையும் கலந்துகொள்ளச் செய்வதும் அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தொகுப்புரையினை செல் தமிழ்ச்சோலை ஆசிரியை திருவாட்டி அருணாவதி இராசகிளி அவர்கள் வழங்கியிருநத்தார். அவர்தனது உரையில் இடம்பெற்ற அனைத்து பயிற்றுநர்களின் செயலமர்வு குறித்து அனது உளப்பூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதைத் தொடர்ந்து செயலமர்வு சிறப்பாக நிறைவுகண்டது.