

நாள் : 20-10-2021
உண்ணா நோன்பு தொடங்கும் முடிவை
கஜன் உடன் கைவிட வேண்டும்!
நிகரற்ற போராளியின் நிகரற்ற உயிர் காப்போம்!
காசி ஆனந்தன் அறிக்கை
தமிழீழ விடுதலை வரலாற்றில் – ஆயுதப் போராட்ட காலத்தில் – 15 ஆண்டுகள் தலைவரின் பாசறையில்
ஒருவனாய்க் களம் ஆடிய தன்னிகரற்ற விடுதலையாளன் கஜன்.
வலிமை மிக்க தமிழீழப் போராளியாய் ஒவ்வொரு களத்திலும் தளபதி பால்ராஜ் அவர்களுக்குப் பக்கத்தில்
எதிரிகளின் குண்டுகளுக்கு நடுவில் நின்று கஜன் போராடியதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.
வெறிகொண்ட சிங்களப்படை முரடர்களால் கஜனைச் சாகடிக்க முடியவில்லை – தமிழர்களால் கஜன்
இன்று சாகடிக்கப்பட்டால் வரலாற்றில் அதைவிட வெட்கக்கேடு தமிழினத்துக்கு எதுவும் இல்லை.
கஜன் யாரோடும் திமிருக்கு உரச வேண்டும் என்று களத்தில் இறங்கவில்லை. தமிழீழ மண்ணின்
உண்மை வரலாறு திரித்து நம் பாடநூலில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கஜனால் ஏற்றுக் கொள்ள
முடியவில்லை.
எமது வரலாற்றைத் திரித்தும் புரட்டியும் கூறும் இப்பாட நூலை முன்பே பலர் எதிர்த்திருக்கிறார்கள்
என்பதை அறிவோம்.
இப்பாடநூலை வெளியிட்டவர்கள் அதை மீளப் பெறவேண்டும். கஜனின் கோரிக்கையில் உண்மை
இருக்கிறது.
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு. சபா குகதாஸ் அவர்கள் ஒரு வரலாற்றுப் பேராசிரியர்.
அவர் முற்றிலும் அதிர்ச்சியுற்றவராய் வெளியிட்டுள்ள ஒரு குரல் பதிவினைக் கேட்டேன்.
தம்பி கஜனைப் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் – புதிய பாடநூலை உருவாக்கியவர்கள் அதை மீளப்
பெறுகிறார்களோ இல்லையோ – அதை எதிர்த்து ‘உண்ணா நோன்பு’ தொடங்க எடுத்த முடிவை நீங்கள்
உடன் மீளப் பெறவேண்டும். புரட்டுகளை – பொய் வரலாற்றைத் தாங்கிய பாடநூலை மக்கள்
புறக்கணிப்பார்கள். கஜன், பதினைந்து ஆண்டுகள் ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராளியாய் நெருப்பின்
நடுவில் பகை மோதி நின்றீர்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஜெனிவாவில் ஐ.நா மன்ற வாசலிலும் –
பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்ற முற்றத்திலும் – பிற ஐரோப்பிய நாடுகளின் வீதிகளிலும் படங்களோடு
தமிழீழ விடுதலைப் பரப்புரையைக் களைப்பில்லாமல் மேற்கொண்டு வருகிறீர்கள். அனைத்துலக மனித
உரிமைச் சங்கத்தை நிறுவித் தமிழீழ விடுதலைக்காக அரும்பணி ஆற்றி வருகிறீர்கள். தமிழீழ விடுதலைப்
போராட்டத்தின் தொடர்ச்சியை உறுதி செய்யும் தலைவர் உருவாக்கிய போராளிகளில் ஒருவராய்
வரலாற்றில் தடம் பதிக்கிறீர்கள்.
உங்கள் உயிர் பெறுமதியானது கஜன்.
கவிஞர் காசிஆனந்தன் தலைவர், ஈழத் தமிழர் நட்புறவு மையம்





