சுவிற்சர்லாந்தில். யாழ்- பேர்ன் நகர முதல்வர்கள் ஒன்றுகூடினர்.

456

சுவிற்சர்லாந்தில். யாழ்- பேர்ன் நகர முதல்வர்கள் ஒன்றுகூடினர்.

கடந்த நாட்களில் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் யாழ். மாநகரசபைத்தலைவர் திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். மாநகரசபை உறுப்பினர் திரு. வரதராஜன் பார்த்திபன், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் திரு. பத்மநாதன் மயூரன் ஆகியோர் 08.05.2022 பேர்ன் மாநிலத்தில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தில், பேர்ன் நகரசபைத் தலைவர் திரு. அலெக்ஸ் பொன் கிறாப்பென்றீட் அவர்களை நேர்கண்டு உரையாடினார்கள்.

யாழ். மாநகர முதல்வரை பேர்ன் மாநில நகரசi முதல்வர் மற்றும் பொதுநோக்கிற்கு பங்களிப்பு அளிக்கக்கூடிய பேராளர்களையும் ஒருகூரையில் நேர்காண ஒழுங்கினை ஏற்படுத்த சைவநெறிக்கூடத்திடம் தமிழ் அமைப்புக்கள் விடுத்த வேண்டுகைக்கு அமைவாக இவ் ஒன்றுகூடல் நடைபெற்றது.

தமிழ் இளவயதினர் அமைப்பான அக்கினிப்பறவைகள் நிகழ்வின் பங்காளராகப் பங்குவகித்தனர்.

ஆயர் பேரவைத் தலைவி யூடித் போர்க்சென் றோடெர், பேர்ன் மாநிலத்தின் தேவாலயங்கள் மற்றும் சமய அலுவல் ஆணையர் திரு. தாவித் லொயிற்வில்லெர், ஓய்வுபெற்ற அருட்தந்தை திரு. அல்பேர்ட் றீக்கெர், பல்சமய இல்லத்தின் தலைவியும் மற்றும் சுவிற்சர்லாந்தில் இருந்து திருப்பி அனுப்பப்படும் வெளிநாட்டவர் நடவடிக்கையின் கண்காணிப்பாளரும், சட்டத்தரணியுமான திருமதி றெகுலா மாதர், பேராசிரியர் கிறிஸ்டியான் வல்ரி, கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த முனைவர். திருமதி. அஞ்செலா பூக்கெல், திபேத்திய நிழலரசுப் சார்பாளரும் – பேர்ன் மாநிலத்தின் பாடசாலைகளின் முரண்களில் தீர்வுகாணும் துறைசார் பொறுப்பாளரும், பேர்ன் மாநிலத்தின் உயர்கல்வித்துறையின் பேராசிரியருமான திருமதி. கர்மா லோப்சாங், பல்மீரா தொண்டு அமைப்பின் நிறுவனர்கள் திரு. திருமதி. கொண்டலின் மோர், பல்சமய இல்லத்தின் கணக்காளர் திருமதி. ஊர்சுலா எக்லேசியா ஆகியோர்களுடன் 12ற்கும் மேற்பட்ட பொதுத் தொண்டு அமைப்புக்களின் சார்பாளர்களும் விருந்தினர்களாக பங்கெடுத்திருந்தனர்.

வரவேற்பு கருவறையில் தமிழ் ஒலிக்கும் ஞானலிங்கேச்சுரத்திற்கு 12.00 மணிக்கு மாநகரசபை முதல்வருக்கும், ஏனைய உறுப்பினர்களுக்கும் வருகை அளித்தனர். தமிழ் வழிபாட்டினைத் தொடர்ந்து அவர்களுக்கு அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தையும், தமிழர் களறி ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தையும் பயிற்றுரையுடன் சுற்றிக்காட்டப்பட்டது.

13.00 மணி அளவில் நண்பகல் உணவு அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் நடைபெற்றது. சரியாக 14.00 மணிக்கு பேர்ன் நகரசபைத் தலைவர் பல்சமய இல்லத்திற்குள் நுழைந்தார். கைலாகு அளித்து யாழ். மாநகர முதல்வர் பேர்ன் நகர முதல்வரை வரவேற்றுக்கொண்டார். சைவநெறிக்கூடத்தின் நெறியாள்கையில் நிரல்படுத்தப்பட்டு ஒன்றுகூடல் நடைபெற்றது. வரவேற்பு உரையினை சைவநெறிக்கூடத்தின் மற்றும் பல்சமய இல்லத்தின் பெயராலும் தில்லையம்பலம் சிவகீர்த்தி ஆற்றினார்.

சைவநெறிக்கூடம் அரசியல் அமைப்பு அல்ல, இவ் ஒன்றுகூடலின் பலன் தமிழர்களுக்கு நாட்டிலும் இங்கு புலத்திலும் நன்மைகள் கிட்ட விருப்புடன் நாம் இங்கு உங்களை வரவேற்கின்றோம். பல்சமய இல்லத்தின் நோக்கு பன்னாட்டுச் சபையின் யாப்பின் உள்ள உட்பொருள் ஆகும். அனைவரும் அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். அதேவேளை வேற்றுமைகளைத் தாண்டி இணக்கத்தினையும் தேட வேண்டும் அதற்கும் நாம் தொடர்ந்தும் உழைப்போம், உரையாடுவோம். சைவநெறிக்கூடம் பல்சமய இல்லத்தின் பதில் தலைமைப் பொறுப்பினையும் கொண்டுள்ளது. உரையாடலுக்கான இல்லமாக பல்சமய இல்லம் இன்று அன்னையர் நாளில் அமைந்துள்ளது. இங்கு பல்நூற்றாண்டுகள் கடந்த சிறப்பாக தமிழர்களின் சார்பாளராக யாழ். மாநகர முதல்வரும், தமிழர்கள் நிறைந்து வாழும் சுவிஸ் பேர்ன் நகரின் முதல்வரும் நேர்கண்டது எமக்கு மகிழ்வை அளிக்கின்றது.

அன்னையர் நாளான இன்று எம் அன்னை மண்ணின் தேவைகளை சுவிசில் பேர்னில் பகர்வதற்கு வாய்ப்பு அமைந்துள்ளது. சுவிசில் பொதுவாக ஞாயிறு நாளில் ஒன்றுகூடல் நடத்துவது கிடையாது. அதுவும் அன்னையர் நாளில் இத்தனை பேராளர்களும் காலம் எடுத்து இங்கு வந்தது தமிழர்களுக்காக என்பதில் எமது உள்ளம் நிறைவடைகின்றது என்றார் சிவகீர்த்தி.

வாழ்த்துரை பல்சமய இல்லத்தின் தலைவி திருமதி. றெகுலா மாதர் இரு நகரசபைத் தலைவர்களுக்கும் தனது வணக்கத்தினை தெரிவித்து தனது வாழ்த்துரையினை அளித்தார். குறுகிய ஏற்பாட்டுக்குள் யாழ். நகரசபைத் தலைவரை நேரில் கண்டு உரையாட இணக்கம் அளித்தமைக்கும் நன்றி நவின்றார். இன்றைய ஒன்றுகூடலிற்கு வாய்ப்பளித்து எமது இல்லமும் தனது நோக்கினை மேலும் ஒரு முறை நிறைகின்றது மகிழ்ச்சி என்றார் திருமதி றெகுலா.யாழ். மாநகர முதல்வர் வேண்டுகை

யாழ். மாநகர முதல்வர் திரு. மணிவண்ணன் தனது வேண்டுகையினை ஆங்கிலத்தில் முன்வைத்தார். சுவிற்சர்லாந்து நாடு தமிழ் மக்களுக்கு அளித்திருக்கும் பாதுகாப்பான வாழ்விற்கு திரு. மணிவண்ணன் நன்றிகளை நவின்றார்.

ஐரோப்பா பயணம் மேற்கொண்டது முதல் பின்லாந்து, நோர்வே, பிரான்சை தொடர்ந்து இன்று சுவிசில் பேர்னில் உள்ளோம்.

பலகாலப் போரால் அதிக உயிர் மற்றும் பொருள் இழப்புக்களை யாழ். நகரும் தமிழர் வாழ்நிலங்களும் எதிர்கொண்டிருந்தன. பெருந்தொற்று மகுடநுண்ணியும் (கோவிட்-19), நிலையில்லாப் வலுவற்ற பொருளாதாரமும் இப்போதும் தொடரும் இடராக உள்ளது. மாநகரசபை தனது பணிகளை பெரும் அக புறச் சாவல்களுடன் எதிர்கொள்கின்றது.

அரசியல் தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. இக்கடினங்கள் நடுவில் நாம் சுற்றுச்சூழலை காத்துகொள்ளும் திட்டங்களை எமது மாநகரசபையால் முன்னெடுக்கின்றோம். எமது தூய்மை நகரத்திட்டத்தில் கழிவுகள் அகற்றப்பட்டும் செயற்பாடுகளும் நடைபெறுகின்றது.

ஐரோப்பாவில் அமைந்துள்ள பெருநகரங்களின் வளங்கள் தொடர்பான பட்டறிவினையும், துறைசார் தொழில்நுட்ப அறிவினையும் உதவியினையும் பெற ஆர்வமாக உள்ளோம். அதுபோல் எமது தூய்மைப் பணியாளர்களுக்கு உரிய காப்பினை வழங்கும் முறைமைகளையும், தொழில்நுட்ப உதவியனையும் நகரங்கள் எமக்குப் பகர்வின் அதனை வரவேற்கின்றோம்.

இரட்டை நகர உடன்படிக்கையினை வரவேற்கின்றோம், அதன்வழி போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை சிறக்கச் செய்ய, நலவாழ்வை வளர்க்கும் பணித்திட்டங்களையும் மேம்படுத்த வாய்ப்பிருப்பின் மகிழ்ச்சி அளிக்கும் என்றார் திரு. மணிவண்ணன்.

பேர்ன் நகரமுதல்வரின் பதிலுரை இவரைத் தொடர்ந்து பேர்ன் மாநில முதல்வர் பதிலளித்து உரையாற்றினார்.

இன்று உங்களை இப் பல்சமய இல்லத்தில் நேர்காண்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. இங்கு 8 சமயங்கள் ஒன்றாக ஒரு கூரையில் உள்ளார்கள். சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாக சமாதானம் நிலவுகின்றது. நாம் தமிழ் மக்களுடன் நீண்ட நெடிய தொடர்புகளைப் இணக்கமாகப் பேணி வருகின்றோம்.

பேர்ன் நகர சபை இதுவரைக்கும் இவ்வாறான திட்டத்தில் பங்கெடுத்திருக்கவில்லை. தென்னமரிக்கா மற்றும் லத்தீன் நாடுகளின் சில நகரங்களில் எமது நகரின் பங்களிப்புடன் பொதுநலத் திட்டங்கள் ஆற்றப்படுகின்றன.

தற்போதைய உக்ரைன் றைசியாப் போரும் இலங்கையை பாதித்துள்ளது என நான் ஊடகங்களில் இருந்து அறிந்துள்ளேன், இவ் இரு நாட்டவர்களும் இலங்கைக்கு செல்லும் பெருந்தொகை சுற்றுலா விருந்தினர்களா இருந்துவந்துள்ளனர். இப்போதைய போரின் பாதிப்பும் சுற்றுலாத்துறையினை பாதித்துள்ளது.

பெரும் போருக்குப்பின்னரும் தீர்வுகளை எட்டாது பொருளாதாரச் சிக்கலிலும் சிக்குண்டிருக்கும் இலங்கை எதிர்மறை எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

சிறந்த வழியில் அனைவரும் நலமுடன் வாழ நாங்கள் வாழ்த்துகின்றோம்.

நல்ல சிறந்த திட்டம் யாழ். மாநகரத்தால் எம்மிடம் முன்மொழியப்படின் அதனை நாம் ஆவணை செய்யத் தயாராக உள்ளோம் என நிறைந்தார் பேர்ன் நகர முதல்வர் திரு. அலெக்ஸ் தனது பதிலுரையில்.

உரையாடல் – இருநகரங்களின் இணக்கம்

வருகை அளித்திருந்த அனைத்துப் பேராளர்களையும் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஐயா அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார்.

அவர்கள் இரு நகர முதல்வர்களுடனும் கேள்வி பதில் வடிவில் உரையாடினர். இதன்போது தற்போதைய இலங்கையின் அரசியல் நிலை, பொருளாதார நெருக்கடிகள், பொதுமக்கள் போராட்டம், போருக்குப்பின்னரான சீர்ப்பணிகள், பேசப்பட்டன. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு உதவ முன்வரும் நாடுகள் இனப்பிரச்சனைக்கு தீர்வினை இலங்கை அரசு முன்வைப்பதை உறுதிப்படுத்தும் செயலையும் ஆற்ற வேண்டும் எனும் வேண்டுதலும் முன்வைக்கப்பட்டது.

புகலிட ஒப்பதல் மறுக்கப்பட்ட தமிழர்களைத் திருப்பி அனுப்பும் நடைமுறையினை சுவிஸ் அரசு மீளாய்வு செய்யவும், திருப்பி அனுப்பும் ஒப்பந்தத்தினை நீக்கிக்கொள்ளவும் வேண்டுகை சைவநெறிக்கூடத்தால் முன்வைக்கப்பட்டது, கடந்தகாலத்தில் நடைபெற்ற சட்டமுரண் சுட்டிக்காட்டப்பட்டது.

சுவிற்சர்லாந்து வாழ் தமிழர்கள் தாயகத்து தமிழர்களுக்கு நலன் கிட்டும் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்வர், இரு நகரங்களுக்கு இடையில் இணக்கப் பணிகள் முன்னெடுக்க சைவநெறிக்கூடம் தொடர்ந்தும் நட்புப்பாலமாக தம் பணியினை ஆற்றும் என்றார் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார்.

நிகழ்வின் நிறைவில் சைவச் சிற்றுண்டி விருந்து அளிக்கப்பட்டது. உரையாடல்கள் வருகை அளித்திருந்தவர்களிடையில் தொடர்ந்தது. சிற்றுண்டி விருந்தில் பங்கெடுத்த பேர்ன் நகரசபைத்தலைவர் சிறந்த நல்ல திட்டத்தை தமக்கு முன்மொழியுமாறும், தாம் ஆர்வமாக இருப்பதாகவும் மீண்டும் உறுதிப்படுத்தி விடைபெற்றார்.

நல் எண்ணங்கள் நல் வடிவமாகி நன்மைகள் கிட்டட்டும் எனும் விருப்புடன் நிகழ்வு நிறைவுற்றது.