

ஐ.நா முன்றலிலே தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய யாழ் நகரபிதா வி. மணிவண்ணன்.
ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 51 வது கூட்டத்தொடர் 12/09/2022 அன்று நடைபெற்ற போது ஐ.நா முன்றலிலே முருகதாசன் திடலில் நடைபெற்ற மாபெரும் ஒன்றுகூடலில் தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய யாழ் நகரபிதா வி. மணிவண்ணன்.
(காணொளி இணைக்கப்பட்டுள்ளது).



அவர் இவ்வாறு உரையாற்றியிருந்தார்.
ஆசியுரை ஆற்றிச் சென்றிருக்கின்ற மதப் பெரியோர்களே, இந்த நிகழ்விலே பங்குபற்ற இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து வருகை தந்திருக்கின்ற எங்களுடைய அரசியல் பிரமுகர்களே, ஊடக நண்பர்களே, எங்களுடைய புலம்பெயர் உறவுகளே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய இந்நேர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் சபையின் 51வது கூட்டத்தொடர் ஆரம்பமாக இருக்கின்றது. இந்த கூட்டத்தொடரிலே இலங்கைக்கு எதிராக ஒரு வலுவான தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கொண்டுவரப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய பெரு விருப்பாக உள்ளது. இலங்கையினுடைய யுத்தம் நிறைவடைந்த பின்னர் கடந்த பல ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினுடைய கூட்டத்தொடரிலே பல்வேறு தீர்மானங்கள் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த தீர்மானங்கள் வலுவான தீர்மானங்களாக அமையவில்லை என்பது தமிழர் தரப்பினுடைய குற்றச்சாட்டாக கடந்த காலங்களிலே இருந்து வருகின்றது. அந்த தீர்மானங்கள் கூட இலங்கை அரசாங்கத்தினாலே பின்பற்றப்படவில்லை அல்லது அந்த தீர்மானத்திலே சொல்லப்பட்ட விடயங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்கின்ற வலுவான குற்றச்சாட்டு பல்வேறு தரப்புகளிடமும் இருக்கிறது. இந்த தீர்மானங்களிலே பல தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தினாலே இணை அனுசரனையோடு நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்களை கூட கடந்த காலங்களிலே இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறி இருக்கின்றது என்பது சர்வதேச மனித உரிமை அமைப்புகளினதும், நாட்டுகளினதும், தமிழர்களினதும் வலுவான குற்றச்சாட்டாக இருக்கின்ற நிலையிலே இன்றைய தினமும் 51வது கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. இந்த கூட்டத்தொடரிலே ஒரு கனதியான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்பது எங்களுடைய பெரும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது,



கோரிக்கையாகவும் இருக்கின்றது. அது தமிழர் தரப்பினுடைய ஒட்டுமொத்த கோரிக்கையாகவும் நான் அதை முன்வைக்கின்றேன். இலங்கையிலே 2009 வரையான காலப்பகுதியிலே தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு யுத்தம் நடைபெற்றது என்பது எங்களது குற்றச்சாட்டாக இருக்கின்றது. அதன் பின்னரும் கட்டமைப்பு சார் இன அழிப்பிலே இலங்கை அரசு ஈடுபட்டு வருகின்றது என்பது தமிழர் தரப்பினுடைய மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு மேலாக 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழினம் தங்களுடைய உரிமைக்காக போராடி வருகின்றது. தங்களுடைய சமஷ்டி அடிப்படையிலான உரிமை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நீண்ட காலமாக போராடிக் கொண்டிருக்கின்ற நிலையிலே எந்தவொரு நிவாரணத்தையும் நாங்கள் இந்த மனித உரிமைகள் பேரவையினுடைய இந்த கூட்டத்தொடரின் தீர்மானங்கள் ஊடாக நாங்கள் அடையவில்லை என்பதுதான் எங்களுடைய ஆதங்கமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கின்றது.
எங்களை பொருத்தமட்டிலே இந்த முறை ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் பேரவையினுடைய தீர்மானத்திலே
இலங்கையில் நடைபெற்ற இன அழிப்புக்கு எதிராக அதிலே பொறுப்பானவர்களுக்கு எதிராக ஒரு சர்வதேச பொறிமுறை ஒன்றின் ஊடாக ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அதனூடாக தமிழர் தரப்பிற்கு ஒரு நீதி வழங்கப்பட வேண்டும் என்கின்ற வலுவான ஒரு தீர்மானம் ஐக்கிய நாடுகள மனித உரிமைகள் சபையினாலே நிறைவேற்றப்பட்டு. ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு. ஐக்கிய நாடுகள் சபை அந்த தீர்மானத்தின் படி இலங்கையிலே தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அந்த அநீதிகளுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திலே அல்லது ஒரு தற்காலிக நீதிமன்றம் ஒன்றிலே இந்த விசாரணைப் பொறிமுறையை ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்களுடைய வலுவான கோரிக்கையாக இருக்கிறது.
ஆகவே நாங்கள் வலுவாக நம்புகின்றோம். இந்த முறை மனித உரிமைகள் பேரவையினுடைய தீர்மானத்திலே இந்த விடயங்கள் உள்ளடக்கப்படும். தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என்கின்ற ஒரு தீர்மானத்தையும் இந்த தீர்மானத்திலே உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் தமிழ் மக்கள் சார்பிலே முன் வைக்கின்றோம்.



இலங்கை அரசாங்கம் இதுவரை காலமும் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பை நடத்திக் கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டிலே தன்னுடைய சொந்த மக்களுக்கு எதிராகவும் அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்களுக்கு எதிராகவும் தன்னுடைய கரங்களை நீட்டியிருக்கிறது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் அந்த போராட்டம் ஒடுக்கப்படுகிறது. அந்த போராளிகள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலிலே வைக்கப்பட்டிருக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையிலே மனித உரிமைகள் பேரவையிலே ஒரு வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனூடாக அதற்கு பொறுப்பானவர்கள் அதற்கு தண்டிக்கப்பட்டிருந்தால் இந்த ஆண்டிலே அரசிற்கு எதிராக போராடியவர்கள், அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள் சுதந்திரமாக தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்திருப்பார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுகின்ற ஒரு அவலம் நிகழ்ந்திருக்காது. இந்த பயங்கரவாத சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்த ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கு ஊடாக கடந்த காலங்களிலே பல தடவைகள் நிறைவேற்றப்பட்ட போதும் அதனை இலங்கை அரசாங்கம் செய்யவில்லை என்பதோடு தங்களுக்கு அரசியல் ரீதியாக எதிரான கருத்துக்களை கொண்டவர்களுக்கு எதிராக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்திவருகிறது.



அதனூடாக நான் கூட கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தேன் என்பதனையும் நான் இந்த சந்தர்ப்பத்திலே கூறிவைக்க விரும்புகிறேன். அந்த வகையிலே இலங்கையிலே இருக்கின்ற வடக்கு, கிழக்கிலே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் எங்களுக்கான உரிமை வழங்கப்பட வேண்டும். நாங்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் எங்களுக்கு எதிராக கடந்த காலங்களிலே இழைக்கப்பட்ட தற்பொழுதும் இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அநீதிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு அந்த அநீதிகள் செய்தவர்கள் சர்வதேச சட்டத்தின் முன், சர்வதேச நீதி பொறிமுறையின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கையாக இந்த சந்தர்ப்பத்திலே முன் வைத்து. இந்த சந்தர்ப்பத்தை எனக்குத் தந்த அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.
நன்றி.
வணக்கம்.
அனைத்து உலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ் மற்றும். இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு
அனைத்து உலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ் மற்றும். இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு